அய்யா நான் அதில் பாடல்களே கேட்டுக்கொண்டிருந்தேன்.மேலும் நண்பர்களுடன் குழுவில் உரைடாடிக் கொண்டிருந்தேன் என்றேன்.இருந்தும் அவர் கேட்டதால் பாடல் ஒன்றை பாடச்செய்து கையில் கொடுத்தேன்.சிறிது நேரம் கேட்டுவிட்டு என்ன தம்பி ஒரு வார்த்தை கூட புரியவில்லை, இசைக்கருவிகள் அனைத்தும் ஒரே இடத்தில் வாசிப்பது போன்ற சத்தம் மட்டுமே காதுகளை பதம் பார்த்தது என்றார்.
சிரித்துக் கொண்டே இது இந்த கால இசை என்றேன். அவரும் சிரித்துக் கொண்டே இசையென்று சொல்லாதே,என்றார்.
தூக்கம் துளிர்விடவே கழிவறை வரை சென்று வந்து உறங்கலாம் என எழுந்து சென்றேன்.
பின் இருக்கையில்,கலையரசி அவள் மேக மெத்தையில் மிதக்கும் நிலவாய் உறங்கிக் கொண்டிருந்தாள்.
காற்றில் உறையும் உதிரமாய் அவள் மூச்சில் உறைந்து நின்றேன்.விழிகள் அசைக்காமல் பள்ளிக்கூட கலையரசியை கற்பனைகளில் வரைந்து கண்முன் நிறுத்தி ஒப்பனைகள் செய்துகொண்டுத்தான் இருந்தேன்.
திடீரென விழித்த அவளைக் கண்டு மருகினேன் பயந்துதான் பார்த்தாள். அவள் திடீரென என்னை பார்த்து ”நீ சண்முகம் தானே! என்றாள். நானும் இயங்காமல் தலையை மட்டும் அசைத்தேன்.
இங்கே என்ன செய்கிறாய்? என்று அவள் கேட்க,அவளின் மொழி அதில் என்னை மறந்து நின்றேன்.மீண்டும் அவள் கேட்கவே, நான் ஊட்டி வரை செல்கிறேன் என்றேன். தனியாகவா செல்கிறாய் எனக் கேட்க நானும் ஆம் என்றேன்.
இப்போது என்ன செய்கிறாய்? எங்கு படிக்கிறாய்? என வினவத் தொடங்கினாள்.

நான் திருச்சியில் மூன்றாம் ஆண்டு வேதியல் படித்துக் கொண்டிருக்கிறேன். ஏனோ நெடுந்தூர தனிமை பயணம் செய்ய வேண்டும் என்று தோன்றியதால் ஊட்டி வரை சென்று வர முடிவு செய்து சென்றுக் கொண்டிருக்கிறேன் என்றேன்.
அவளின் கல்வி பற்றி கேட்க எண்ணினேன் எதற்கு என்று அமைதியாய் நின்று கொண்டிருக்க அவளே நான் கல்லூரிக்குத்தான் சென்று கொண்டிருக்கிறேன்.நான் முதலாம் ஆண்டு கணிதம் படித்துக் கொண்டிருக்கிறேன்.விடுமுறை முடிந்து விடுதிக்கு சென்று கொண்டிருக்கிறேன் என்றாள் கலையரசி.
சரி உறங்கச் செல்கிறேன், என்று நகர்ந்தேன்.
நில் உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும்.
எப்படி சொல்வது என்று தெரியவில்லை,இருந்தாலும் சொல்கிறேன்.
பள்ளி நாட்களில் உன் மேல் ஏதோ இனம் புரியாத காதல் காட்டாற்று வெள்ளமாய் ஓடியது ஆனால் கரையைத்தான் இன்னும் தேடிக்கொண்டிருக்கிறது.
என்ன? என் மேல் உனக்கு காதலா ?
பேசியது கூட கிடையாதே பெரிதாய் பின் எப்படி காதல்.காரணம் தேடினால் கண்கள் முடியதும் காணாமல் போய்விடும்,காரணங்கள் சிக்காமல் காதல் வருவதே கடைசி காலம் வரை தாக்கு பிடிக்கும் என பேசிக் கொண்டு இருந்தாள்.இதையெல்லாம் கேட்க மகிழ்ச்சியாக இருந்தாலும் கண்கள் காதல் எல்லாம் ஏற்கத் தயாராக இல்லை.
இன்னும் அந்த காதல் இருக்கிறதா எனக் கேட்டதற்கு அவளோ இருக்கிறது ஆனால் காதலிக்கும் அளவு தைரியம் இல்லை பெற்றோர் வாக்கு மீறும் தைரியமும் இல்லை என்ன செய்வது பெண்ணாக அல்லவா பிறந்து விட்டேன், என்றாள் கலையரசி. அமைதியாக நானும் உறங்க செல்வோமா? என்றேன்.சரி உன் விருப்பம் என கூறிச்சென்றாள்.

நானும் கழிவறைக்குச் சென்று படுக்கைக்கு விரைந்தேன்.முதியவரோ நன்றாக உறங்கிக் கொண்டிருந்தார்.நானும் என் படுக்கையில் ஏறி படுத்து உறங்கத் தொடங்கினேன். திடீரென தம்பி எழுந்திரு இறங்கும் இடம் வந்தது என்றார்,முதியவர். எழுந்து விழிகள் மெதுவாக திறந்து வெளியே பார்த்தேன் கோவை ரயில் நிலையத்தில் ரயில் நின்று கொண்டிருந்தது.
முதியவர் என்னிடம் பேசிய படியே வெளியே சென்று குளம்பி அருந்த அழைத்தார் வேண்டாம் என்றும் விடாது வாங்கிக் கொடுத்துவிட்டார்.
குடித்துவிட்டு இருவரும் நகர்ந்தோம்.நான் செல்ல வேண்டிய பேருந்து வந்தது என்று பெரியவர் வேகமாக நடக்கத் தொடங்கினார்.அதற்கு முன் “தம்பி எவ்வளவு பிரச்சனை வந்தாலும் பெற்றோர் உனக்காக வாழ்பவர்கள் என்பதை மட்டும் மறவாதே” என்று பேருந்தில் ஏறிச்சென்றார்.
கலையரசியை கண்கள் தேடியது. சுற்றித்தான் திரிந்தேன் சிறிது நேரம் அவளை தேடியே. என் கண்களில் இருந்து தப்பிச்சென்றாள். ஏனோ! ஆண்டுகள் கழித்து ரயிலில் கண்டவள் ரயிலோடே மறைந்தாள். ஏனோ சங்கடங்கள் என்னை சாய்பது போல் இருந்தது.இருந்தும் மீளவே ஊட்டியை நோக்கிய பயணத்தை தொடங்கினேன்.
பேருந்தில் சாளர ஓரத்தில் உட்கார்ந்து எண்ணற்ற நினைவுகளை அசைபோட்டுக்கொண்டே பொழுதை நகர்த்தினேன்.பறந்து விரிந்த பச்சை வானில் மலையரசி மட்டும் ஏனோ கொஞ்சம் எட்டாத உயரத்தில் உட்காதிருப்பது கண்களில் காணக் கண்டிடாத காட்சியாய் கிடைத்தது.
மேகங்களோடு கொஞ்சி விளையாடும் மலைமுகடுகள்.தொட்டுச்சென்று விரட்டி வா என மலையரசியை வம்புக்கு இழுக்கும் மேகக் கூட்டம்.
என் உள்ளத்தை உயரே பறக்கச்செய்யும் பச்சை பறவைகளாய் அந்த அழகு கொஞ்சும் காட்சிகள்.
இவ்வாறே பொழுது நகர மலைமீது பேருந்து ஏறிக்கொண்டு இருக்கும் நேரம்
ஏனோ!
அச்சம் எட்டித்தான் பார்த்தது என்னுள்ளே…..
-சண்முக நாதன்
தொடரும்……
