திருச்சி அருகே மீன் கழிவு ஏற்றி வந்த வாகனத்தை பொதுமக்கள் முற்றுகை !

திருச்சி அருகே மீன் கழிவு ஏற்றி வந்த வாகனத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள சிறுபத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட காட்டு பகுதியில் நாமக்கல்லை சேர்ந்த தனிநபர் ஒருவர் மீன் கழிவுகளை கொண்டு கோழிக்கு இரையாக தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
இதற்காக திருச்சி மீன் மார்க்கெட்டில் இருந்து டன் கணக்கில் தினமும் வாகனங்கள் மூலம் மீன் கழிவுகளை வாங்கிவந்து அதனை வெயிலில் காய வைத்து பவுடராக தயார் செய்கின்றனர்.
அவ்வாறு வெயிலில் காய வைக்கப்படும் மீன் கழிவுகளால் வடக்கு மற்றும் தெற்கு சிறுபத்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் கிருமி தொற்று ஏற்பட்டு ஆடு, மாடு, கோழி மற்றும் நாய் போன்ற உயிரினங்கள் நோய்வாய் படுவதாக கூறப்படுகிறது.

இதனை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் தரப்பில் பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று இரவு மீன் கழிவுகளை ஏற்றிக்கொண்டு வந்த வாகனங்களை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் இதுகுறித்து மண்ணச்சநல்லூர் வட்டாச்சியரிடம் தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

நம்ம திருச்சி செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…
https://chat.whatsapp.com/2fzPX6Xk74u1Jvo2IcaWSe
