
மொபைல் போனில் தகவல்கள் திருடப்படுவதை தவிர்க்க வேண்டுமா?
தற்போது சிறுவயதினர் முதல் முதியோர் வரை அனைவரின் கையிலும் ஆன்ராய்டு போன் இல்லாமல் இருப்பதில்லை. உரையாடலில் ஆரம்பித்து தற்போது பணபறிமாற்றம் வரை அனைத்து இடங்களிலும் செல்போன் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதே போல், செல்போன் மூலம் மோசடியில் ஈடபடுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அவை பெரும்பாலும் நாம் பயன்படுத்தும் செல்போன் செயலிகள் மூலமாகவே நிகழ்கின்றன.
பாதுகாப்பான முறையில் செயலியை பதிவிறக்கம் செய்வதே தவறான வழிகளைத் தடுப்பதற்கான முதல் வழி. குறுஞ்செய்திகளில் வரும் லிங்கையோ, வலைத்தளங்களில் வரும் லிங்கையோ பயன்படுத்தி செயலியை பதிவிறக்கம் செய்வதைத் தவிர்க்கவும்.

எந்த செயலியாக இருந்தாலும், அதை கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்வது சிறந்த முறை. அவ்வாறு செயலி பதிவிறக்கம் செய்யும்போது கேட்கப்படும் கேள்விகளை நன்றாகப் படித்துப்பார்த்து, அதன் செயல்முறை குறித்து தெளிவாக உணர்ந்த பின்பு பதிவிறக்கம் செய்வது நல்லது.
சில செயலிகளை பதிவிறக்கம் செய்யும்போது, உங்களது செல்போனில் உள்ள தொலைபேசி எண்கள், போட்டோ, வீடியோ போன்றவற்றை பயன்படுத்திக்கொள்ள ‘ஆப்ஷன்’ கேட்கும். நாம் ‘நோ’ என்று மறுப்பு கொடுக்கும் பட்சத்தில் செயலி பதிவிறக்கம் ஆவது தடைபடும்.

இப்படியான சூழலில் ‘எஸ்’ கொடுத்து செயலியை பதிவிறக்கம் செய்த பின்பு, செல்போன் செட்டிங்கில், செயலியின் விவரங்கள் பக்கத்தில் ‘permission’ என்ற ஆப்ஷன் இருக்கும். அதை ‘கிளிக்’ செய்தால் உங்கள் செல்போனில் உள்ள என்னென்ன தகவல்கள், அந்த செயலியில் இணைக்கப்பட்டுள்ளது அல்லது அந்த செயலியில் பயன்படுத்த முடியும் என்ற பட்டியலைக் காட்டும். அதில் நமக்குத் தேவையில்லாத அல்லது நம் தனிப்பட்ட விவரங்கள் இருப்பவற்றை கிளிக் செய்து (Deny) என்ற ஆப்ஷனைக் கொடுக்கவும். இது உங்களின் தனிப்பட்ட விவரங்கள் செயலியில் இணைக்கப்படுவதைத் தடுக்கும்.
