
பேஸ்புக் பக்கத்தில் தனக்குத்தானே மரண செய்தி போட்ட வாலிபர் கைது!
திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த ஆலம்பட்டி புதூர் அருகே இனாம் குளத்தூர் வெல்கம் சிட்டியில் அப்துல் ரகுமான் தெருவை சேர்ந்த செளபர் அலி (28), எலெக்ட்ரிஷியனாக வேலை செய்து வருகிறார்.
இவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் திருமணமானது. இந்நிலையில், தனது பேஸ்புக் பக்கத்தில், “என் மரண செய்தியை நீங்கள் அறிந்தால் என் மறுமை வாழ்க்கைக்காக நல்ல முறையில் பிரார்த்தனை செய்யுங்கள்” என்ற வாசகத்தை பதிவிட்டிருந்தார். கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய ஜமீஷா முபின் வைத்திருந்தது போன்றே இந்த வாசகம் இருந்ததால் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து, வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் தடயவியல் நிபுணர்களுடன் சென்ற போலீசார் செளபர் அலியின் வீட்டில் முழுமையாக சோதனை நடத்தினர்.
அப்போது, சந்தேகப்படும் படியான எந்தப் பொருளும் சிக்கவில்லை. இருப்பினும், அவரது செல்போனை கைப்பற்றிய சைபர் கிரைம் போலீசார், அதில் உள்ள விவரங்களை சேகரித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், சமூக வலை தளம் மூலம் கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
மேலும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
