
“டெஸ்ட் பர்ச்சேஸ்”.. என்ற முறையை ரத்து செய்யக்கோரி வணிகர்கள் சங்கம் சார்பில் மனு!
தமிழக வணிகவரித்துறை அதிகாரிகள் “டெஸ்ட் பர்ச்சேஸ்” என்ற முறையினை அமல்படுத்தி வருகின்றனர். இத்திட்டத்தின்படி முறையாக வரி செலுத்தப்படவில்லை என குற்றம் சாட்டி தமிழகம் முழுவதும் வணிகர்களிடம் பெரும் தொகையை அபராதமாக வசூலித்து வருகின்றனர்.
இத்திட்டம் அதிகாரிகளின் லஞ்சம் ஊழலுக்கு வழிவகுக்கும் திட்டமாகும். எனவே தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு இத்திட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி முதற்கட்டமாக தமிழகம் முழுவதும் மாவட்ட அளவிலான வணிகவரி உயர் அதிகாரியிடம் மனு அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

அதனடிப்படையில் இன்று திருச்சி நீதிமன்ற வளாகத்தில், அமைந்துள்ள வணிகவரி அலுவலகத்தில் திருச்சி கோட்ட வணிகவரி இணை ஆணையரை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு தலைமையில் 200க்கு மேற்பட்ட வணிகர்கள் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர். வணிக துறை இணை ஆணையர் சத்தியநாதன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இது குறித்து கோவிந்தராஜூலு கூறுகையில்,

தமிழகம் முழுவதும் டெஸ்ட் பர்சேஸ் முறையை திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை வைத்தோம். அதிகாரிகள் இதுகுறித்து தமிழக அரசிடம் முறையிடப்படும் என தெரிவித்தனர். நாங்களும் இது தொடர்பாக தமிழக முதல்வரை சந்தித்து மனு அளிக்க உள்ளோம். இந்த டெஸ்ட் பர்ச்சேஸ் முறை அதிகாரிகள் மத்தியில் ஊழலுக்கு வழி வகுக்கும் .
இதுவரை 164 வணிகர்களிடம் அபராத்தை வாங்கி உள்ளனர்.
தமிழக அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில் அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர் என்றார்.
