
திருச்சி ரயில் நிலையத்தில் பல நாள் கைவரிசை காட்டிய திருடனுக்கு குண்டாஸில் காப்பு!
ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் கைவரிசை காட்டிய ஆசாமி, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.
திருச்சி ரயில் நிலைய சந்திப்பு மற்றும் இதர ரயில் நிலையங்கள், ஓடிக்கொண்டு இருக்கும் ரயில்கள் போன்ற இடங்களில் அடிக்கடி திருட்டு, வழிப்பறி போன்ற சம்பவங்கள் நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது .
அதன்படி திருச்சி இரும்புப் பாதை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மோகனசுந்தரி தலைமையிலான குழுவினர் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த நபரை பிடித்து விசாரித்த போது அவர், திருச்சி சங்கிலி ஆண்டவர் புரத்தைச் சேர்ந்த ராஜு மகன் ராஜா என்கிற ராக்கெட் ராஜா வயது (32) என்பது தெரிய வந்தது.

மேலும் அவர் தொடர் வழிப்பறி, திருட்டு, வாகன திருட்டு உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.
தொடர் திருட்டு சம்பவங்களில் அவர் ஈடுபட்டு வந்ததால் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்குமாறு இன்ஸ்பெக்டர் மோகனசுந்தரி பரிந்துரை செய்தார்.
அதன்படி திருச்சி மாநகர கமிஷனர் கார்த்திகேயன், மேற்படி ராஜாவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
