ரூம் போட்டு யோசிப்பாங்களோ…. கிரைண்டர் கல் வடிவில் கடத்தி வரப்பட்ட 18 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கம் சிக்கியது

ரூம் போட்டு யோசிப்பாங்களோ…. கிரைண்டர் கல் வடிவில் கடத்தி வரப்பட்ட 18 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கம் சிக்கியது
திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு, உலகம் எங்கிலும் இருந்து விமான சேவைகள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளில், சிலர் வரும்போது தங்கம் உள்ளிட்ட விலை மதிப்பிலான பொருட்களை மறைத்து எடுத்து வருவது வழக்கம்.
இது போன்ற நபர்களை விமான நிலையத்தில் உள்ள வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் இனம் கண்டறிந்து அவர்களிடம் உள்ள பொருட்களை பறிமுதல் செய்து அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பது வழக்கம் .
விமானத்தில் கடத்தி வரும் பொருட்களில் அதிக அளவு தங்கமே இடம்பெறுகிறது. தங்கத்தை பேஸ்ட் வடிவிலும் போட்டோ ஃப்ரம் வடிவிலும், தகடுகளாக மாற்றியும் என பல்வேறு உருவமாற்றம் செய்து கடத்தி வந்து பலர் சிக்கி உள்ளனர்.

இதுபோன்ற சூழ்நிலையில் திருச்சி விமான நிலையத்தில் வித்தியாசமான முறையில் கடத்தி வரப்பட்ட தங்கம் பிடிபட்டது சிங்கப்பூரில் இருந்து ஸ்கூட் விமானம் மூலம் இன்று காலை திருச்சி வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது பயணி ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டு அவரது உடமைகளை சோதனை செய்தனர். எதுவும் சிக்கவில்லை. அவர் கொண்டு வந்த பொருட்களை பார்த்தபோது ஒரு டேபிள் டாப் கிரைண்டர் இருந்தது.
இந்தியாவில் கிடைக்காத கிரைண்டரா என்று குழப்பம் அடைந்த அதிகாரிகள் அதனை தீவிரமாக ஆய்வு செய்தனர்.
ஒரு கட்டத்தில் அதில் இருந்த உருண்டையான பாகத்தை சோதித்தபோது அது தங்கம் என்று தெரியவந்தது.
தொடர் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதன் எடை 347 கிராம் ஆகும். இதன் மதிப்பு 18லட்சத்து 55ஆயிரம் ரூபாய் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
