
அபராதம் வேண்டாம்! மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டபொதுமக்கள்! அறிவுரை கூறி அனுப்பிய அதிகாரிகள்
திருச்சி மாநகராட்சி சாலைகளில் ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் சுற்றித்திரிவதால் அடிக்கடி விபத்துக்கள் நடக்கின்றன.

இதையடுத்து சாலைகளில் திரியும் கால்நடைகளை மாநகராட்சி நிர்வாகம் பிடித்து, உரிமையாளர்களுக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பீமநகர், தில்லைநகர், உறையூர் கல்லுக்குழி, உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மாடுகளின் உரிமையாளர்கள் நேற்று இரவு திருச்சி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் கூறும் போது, போக்குவரத்துக்கு இடையூறு இன்றி வீட்டு அருகே நிற்கும் மாடுகளையும் இரவில் வந்து பிடித்து செல்கின்றனர். இதற்கு அபராதமும் விதிக்கின்றனர்.
நாங்கள் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளோம். அபராதம் கட்டமுடியாமல் சிரமம் அடைந்து வருகிறோம். எனவே மாடுகளை பிடித்தால் அபராதம் விதிக்க கூடாது என்றனர். பின்னர் மாநகராட்சி மேயரை சந்தித்து இது குறித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அப்போது, அவர் மாடுகளை சாலையில் விடாமல் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். இதைக்கேட்ட பொதுமக்கள் நொந்து போய் திரும்பினர்.
