
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ரூ. 85 லட்சம் காணிக்கை வசூல்!
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து அம்மனை தரிசித்து செல்வது வழக்கம்.

மேலும், நேர்த்திக்கடனாக தங்கம், வெள்ளி மற்றும் உண்டியல் காணிக்கைகள் செலுத்துவது வழக்கம். பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கைகள் மாதம் இரு முறை எண்ணப்படும். அதன்படி, நவம்பர் மாதத்தில் 2-வது முறையாக காணிக்கை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. இதில் கோவில் இணை ஆணையர் கல்யாணி முன்னிலையில் 37 உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் கோவில் பணியாளர்கள், பக்தர்கள், தன்னார்வலர்கள் என ஏராளமானோர் ஈடுபட்டனர்.
கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ. 85 லட்சத்து 49 ஆயிரத்து 57 ரொக்கப்பணம் வசூலானது. மேலும் 2 கிலோ 287 கிராம் தங்கம், 3 கிலோ 691 கிராம் வெள்ளி மற்றும் 276 வெளிநாட்டு கரன்சி நோட்டுகளும் இருந்ததாக கோவில் இணை ஆணையர் கல்யாணி தெரிவித்தார்.
