
“”ஓவர் நைட்டில் ஒபாமா” நாலு மணி நேரத்தில் பளபள சாலை…
திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் அனைத்து வகை வாகனங்களும் கலையரங்கம் தியேட்டர் வழியாக சென்று ஜென்னி பிளாசா வலது புறம் திரும்பி தான் செல்ல இயலும். மத்திய பேருந்து நிலையத்திலிருந்து ஜென்னி பிளாசா ஹோட்டல் வரையான சாலையானது கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாகவே மிகவும் குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கே தகுதியற்ற நிலையில் காணப்பட்டது.
மேலும் தமிழ்நாடு ஓட்டல் அருகே சாலையின் குறுக்கே குழாய் பறிக்கும் பணி நடந்து அந்தப் பள்ளங்களும் சரியாக மூடப்படாததால் இந்த சாலையை பயன்படுத்த முடியாதோ என்ற அவல நிலை இருந்தது.
இந்த நிலையில் 3 ஆம் தேதி காலையில் இந்த சாலையை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்று விட்டனர் . ஏனென்றால் இரவோடு இரவாக மத்திய பேருந்து நிலையத்திலிருந்து ஜென்னி பிளாசா ஹோட்டல் சந்திப்பு வரையான சாலை புத்தம் புதிதாக போடப்பட்டு பளபள பளபள என்று காட்சியளித்தது .

இதை பார்த்து பிரமித்த மக்கள், விடிவதற்குள் புதிய சாலைகளை ஏற்படுத்த முடியும் என்றால் நகரில் ஏன் பெரும்பாலான சாலைகள் குண்டும் குழியுமாகவே கிடக்கின்றன என்று கேள்வியை எழுப்பியதோடு, இந்த மாயத்துக்கு காரணம் என்ன என்றும் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.
விசாரித்த போது தான் தெரிந்தது ஒரு ஆய்வுக்கூட்டம் தான் இந்த சாலை பளிச் என மாறுவதற்கு காரணமாக அமைந்த விஷயம்…

திருச்சி மத்திய பேருந்து நிலையம் கலையரங்கம் வளாகத்தில் பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை, அரியலூர், திருச்சி மாவட்டங்களுக்குட்பட்ட மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் உள்ளிட்ட ஊராட்சி அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. அமைச்சர் கே.என்.நேரு தலைமை வகித்தார்.
போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் திருச்சி எம்பி திருநாவுக்கரசர் ,கரூர் எம்.பி ஜோதிமணி திருச்சி ,பெரம்பலூர், அரியலூர் ,கரூர், புதுக்கோட்டை, உள்ளிட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்கள், இந்த ஐந்து மாவட்டங்களுக்கு உட்பட்ட எம்எல்ஏக்கள் மாவட்ட ஊராட்சி தலைவர்கள் ,உள்ளாட்சி பிரதிநிதிகள் என அனைத்து மட்ட பொறுப்பாளர்களும் இந்த ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இவ்வாறு வெளியூர் எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் முக்கிய பிரமுகர்கள் வரும் நேரத்தில் நிகழ்ச்சி நடக்கும் கலையரங்க வளாகத்துக்கு வரும் இந்த சாலை கேவலமான நிலையில் இருந்தால்…உள்ளூரில் அமைச்சர் இருக்கிறார்…. அதுவும் பலம் பொருந்திய அமைச்சர்….
அவர் இருக்கும் இடத்தில் அதுவும் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கே சாலை சரியில்லையே என முக்கிய பிரமுகர்கள் நினைப்பார்கள் என்ற நிலையில்தான் மாநகராட்சி களம் இறங்கி, சாலையை சரி செய்யும் பணியை ஓவர் நைட்டில் தொடங்கியது .
இரவு 9 மணிக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே பேரிகார்டுகளை அமைத்து தடுப்புகளை ஏற்படுத்திய ஊழியர்கள் அதிவிரைவாக வாகனங்களில் தார் கலந்த ஜல்லியை கொண்டு வந்து கொட்டி ஜென்னி பிளாசா ஹோட்டல் திருப்பம் வரை அதி விரைவாக சாலையை அமைத்தனர்.
அதேபோல கலையரங்கம் தியேட்டர் வளாகத்துக்கு உள்பகுதியிலும் சிறிது தூரத்துக்கு தார் சாலையை அமைத்தனர் கிட்டதட்ட நான்கு மணி நேரத்துக்குள் இந்த சாலைகள் அமைக்கும் பணி நிறைவு பெற்று புத்தம் புது சாலை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.
இதைத்தான் “ஓவர் நைட்ல ஒபாமா மாதிரி ஃபேமஸ் ஆவறதன்னு.. சொல்வார்களோ
-அரியலூர் சட்டநாதன்
