குடிநீர் குழாய்களில் உடைப்புகளுக்கு துல்லியமாக கண்டறிய திருச்சியில் ‘ரோபோடிக்’ இயந்திரம் மூலம் முயற்சி!

குடிநீர் குழாய்களில் உடைப்புகளுக்கு துல்லியமாக கண்டறிய ‘ரோபோடிக்’ இயந்திரம் மூலம் முயற்சி!
குடிநீர் குழாய்களில் உடைப்பு அல்லது கசிவு இருந்தால் பள்ளம் தோண்டி கண்டறிய வேண்டிய வேலை இனி இருக்காது மாநகராட்சி மேயர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
திருச்சி மாநகராட்சி பகுதிகளிலுள்ள குடிநீர் குழாய்களில் கசிவு, சிறிய அளவிலான உடைப்பு ஏற்பட்ட இடங்களை துல்லியமாக கண்டறிய ‘ரோபோடிக்’ இயந்திரம் மூலம் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருச்சி மாநகராட்சியின் சில பகுதிகளில் பல ஆண்டுகளுக்கு முன்னர் பதிக்கப்பட்ட பிரதான குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்பட்டு வருகிறது.


இதில், எங்கேனும் உடைப்பு, கசிவு ஏற்பட்டு சாலையில் நீர் வெளியேறினாலோ அல்லது குடிநீரில் கழிவுநீர் கலந்தாலோ அந்த இடத்தை துல்லியமாக கண்டறிவதில் மாநகராட்சி நிர்வாகத்துக்கு பெரும் சிரமம் ஏற்பட்டு வருகிறது.
மாநகராட்சி பொறியியல் பிரிவினர் சம்பந்தப்பட்ட இடத்தை கண்டுபிடிப்பதற்காக, ஆங்காங்கே சாலையைத் தோண்டி குழாய்களை பரிசோதிக்க வேண்டிய நிலை இருந்து வருகிறது. இந்நிலையில், புத்தூர் ஆபீசர்ஸ் காலனி, அரசு மருத்துவமனைக்கு எதிரே செல்லக்கூடிய
ஈ.வெ.ரா சாலை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக குடிநீர் குழாய்களில் ஆங்காங்கே தொடர்ச்சியாக நீர்க் கசிவு ஏற்பட்டு வந்ததால், நவீன தொழில் நுட்பங்களின் உதவியுடன் ‘ரோபோடிக்’ இயந்திரம் மூலம் கண்ணுக்கு புலப்படாத மிக நுண்ணிய பழுதுகள், நீர்கசிவுகளைக் கண்டறிய மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.
அதன்படி, சென்னையிலுள்ள தனியார் நிறுவன பொறியாளர்கள் வரவழைக்கப்பட்டு பரிசோதனை அடிப்படையில் புத்தூர் ஆபீசர்ஸ் காலனி, ரெங்கநாதபுரம் பகுதிகளில் செல்லக்கூடிய குடிநீர் குழாய்களில் ரோபோடிக் இயந்திரங்கள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஒரு பகுதியில் குடிநீர்க் குழாயில் கசிவு இருப்பதாகவோ அல்லது குழாயில் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் கலப்பதாகவோ தெரிய வந்ததால், அப்பகுதியில் ரோபோடிக் இயந்திரம் மூலம் எளிதில் ஆய்வு செய்ய முடியும். இந்த இயந்திரம் வைக்கப்படும் இடத்திலிருந்து 300 மீட்டர் தொலைவுக்கு குழாயை துல்லியமாக படம்பிடித்து காட்டும்.
எனவே சாலையை ஆங்காங்கே தோண்டுவதற்கு பதிலாக பழுது இருக்கக்கூடிய அல்லது கசிவு ஏற்பட்டுள்ள பகுதியில் மட்டும் சாலையை தோண்டி குடிநீர் குழாய் உடைப்பு, கசிவுகளை எளிதில் சீரமைத்துவிடலாம். பரிசோதனை முயற்சியாக, இந்த கருவியை பயன்படுத்தி வருகிறோம். இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
