
நெகிழியை புறக்கணிப்போம்… வணிகர்கள் உறுதிமொழி..
ஒருமுறை பயன்படுத்தும் நெகிழியை புறக்கணிப்போம் என்று வணிகர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் (15. 11. 22) அன்று நடந்த
ஆய்வுக் கூட்டத்தில் காட்டுப்புத்தூர் தேர்வுநிலை பேரூராட்சியை நெகிழி பயன்பாடு இல்லாத பேரூராட்சியாக 90 நாட்களில் அறிவிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன், நெகிழி இல்லா பேரூராட்சி திட்ட பணிகளை துவக்கி வைத்து, ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழிப் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என்று விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டார்.

வணிக நிறுவனங்களில் துண்டு பிரசுரம் வழங்கியும், விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டியும் ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழி பொருட்களை பயன்படுத்துவோ, விற்பனை செய்யவோ வேண்டாம் என வணிக நிறுவனங்களிடம் கேட்டுக்கொள்ளபட்டது. வணிக நிறுவனங்களில் தொடர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு ஒரு முறை பயன்படுத்தப்படும் நெகிழிப் பொருட்கள் பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்பட்டது. இது குறித்து வணிகர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
பேரூராட்சி செயல் அலுவலர் சாகுல் அமீது தலைமையில்,வணிகர் சங்கத் தலைவர் குப்புசாமி (எ) மணி, துணைத் தலைவர் மோகன், கௌரவ தலைவர்கள் கங்கா மனோகரன், ராமலிங்கம், செயலாளர் மகேஸ்வரன், துணை செயலாளர் செல்வநாயகம், பொருளாளர் ராஜா மற்றும் வணிகர்கள் கலந்து கொண்டனர்.

ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழிப் பொருட்களை பயன்படுத்தவோ, விற்பனை செய்யவோ மாட்டோம் என வணிகர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் . மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுரையை ஏற்று பேரூராட்சிக்கு முழு ஒத்துழைப்பு நல்குவதாகவும் தெரிவித்தனர்.
