
பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி திருச்சியிலிருந்து 800 கி. மீ. நடைபயணம்!
பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி மதுரையைச் சேர்ந்த கருப்பையா (52) என்பவர் திருச்சியிலிருந்து 800 கி. மீ. நடைபயணம் தொடங்கினார். அகில இந்திய காந்திய மக்கள் இயக்க தேசிய ஒருங்கிணைப்புச் செயலாளரான இவர், கடந்த 33 ஆண்டுகளாக தேச நலனுக்காவே பல்வேறு சமூக சேவைகளை ஆற்றி வருகிறார்.
மிதிவண்டி பயணம், நடைபயணம் என நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் 98 ஆயிரத்து 600 கி. மீ. பயணம் மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.

இவரது மனைவி சித்ராவும் கணவருடன் பயணம் மேற்கொண்டு, கடந்த ஆகஸ்ட் மாதம் பயணத்திலேயே உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து தனி ஒருவராக தனது பணியை கருப்பையா, மேற்கொண்டு வருகிறார்.
தற்போது தமிழகத்தை வலம் வரும் வகையில் 800 கி. மீ. தொலைவு நடைபயணத்தை திருச்சியில் இன்று அவர் தொடங்கினார்.

திருச்சி கோட்டை காந்திசிலை முன் தொடங்கிய இந்த நடைபயணத்தை, திருச்சி வடக்கு சர்வோதய சங்கச் செயலரும், தேச பக்தருமான சுப்பிரமணியன், மூவர்ணக் கொடியை அசைத்து தொடங்கி வைத்தார். சர்வோதய சங்க ஊழியர்களும், தேச பக்தர்களும் வாழ்த்தி வழியனுப்பினர்.
