NammaTrichy
NammaTrichy - Online News Portal about Trichy Tamilnadu

BREAKING NEWS

அனைத்து சமயங்களும் தமிழ் மொழியைக் கொண்டாடியிருக்கிறது – சூரியனார் கோயில் ஆதீனம் பெருமிதம்

உலகத்தில் மதத்தால் வேறுபாடு இருப்பதாக ஒரு மாயத்தோற்றம் நிலவுகிறது. மதம் என்பதையே நாம் ஏற்றுக் கொள்வதில்லை.

0
1

அனைத்து சமயங்களும் தமிழ் மொழியைக் கொண்டாடியிருக்கிறது

சூரியனார் கோயில் ஆதீனம் பெருமிதம்

இந்து சமயம், கிறித்தவம், இஸ்லாமியம், பௌத்தம், சமணம் என அனைத்து சமயங்களும் தமிழ் மொழியைக் கொண்டாடியிருக்கிறது என்பது நமக்கான பெருமையாகும் என்று சூரியனார் கோயில் ஆதீனம் 28-ஆவது குருமகாசந்நிதானம் திருப்பெருந்திரு மகாலிங்க தேசிக பரமாச்சாரியார் பேசினார்.

தமிழ்ப்பல்கலைக் கழகம் தஞ்சாவூர் தமிழ் வளர் மையமும், மணப்பாறை பழந்தமிழ்க் காவிரி அறக்கட்டளையும் இணைந்து நடத்தும் “பேசும் கலை” பட்டயப்படிப்பு தொடக்கவிழா, மருங்காபுரி அருகில் உள்ள முடுக்குப்பட்டி குறளாலயம் வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.

"பேசும் கலை" பட்டயப்படிப்பு தொடக்கவிழா,
“பேசும் கலை” பட்டயப்படிப்பு தொடக்கவிழா,
3

இந்நிகழ்வில் பங்கேற்று அவர் மேலும் பேசியது.

உலகத்தில் மதத்தால் வேறுபாடு இருப்பதாக ஒரு மாயத்தோற்றம் நிலவுகிறது. மதம் என்பதையே நாம் ஏற்றுக் கொள்வதில்லை.

அனைவருக்கும் வழிபடும் உரிமை உள்ளது. ஒவ்வொருவரும் ஒரு சமயத்தை தழுவி நிற்கிறார்கள்.

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்துடன் இணைந்து, பழந்தமிழ்க் காவிரி அறக்கட்டளை முன்னெடுத்து வரும் இந்த விழாவில் மூன்று சமயங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக இருப்பது பெருமையாக இருப்பதாகப் பேசினார்கள்.

சமயங்களுக்குள் ஒரு நாளும் வேற்றுமை இருந்தது இல்லை. சமூகம் சார்ந்து இயங்குவதிலும், சகோதரத்துவத்தை நிலைநாட்டுவதிலும் சமயவாதிகளுக்கு அதிக அக்கறை உண்டு.

நாம் நாமாக இருக்கும் வரை நமக்குள் பேதமில்லை. நாம் வேறாக இருக்கும்போது பேதம் உருவாகிறது.

அதற்கு நாம் ஒத்திசைத்தல் கூடாது. என்னைப் பொருத்தவரை தமிழ்நாட்டில் எந்தக் காலத்திலும் மதங்களால் வேறுபாடு நிகழாது.

ஆலய வழிபாடு வேறு, அரசியல் நிலைப்பாடு வேறு. சமயம் வேறு, சகோதரத்துவம் வேறு என்று பகுத்து நோக்கும் சிந்தனை தமிழ் மக்களுக்கு உண்டு.

பேசும் திறத்தால் நம்மைக் கட்டியாண்டவர்கள் நிறைய பேர் உள்ளனர். பேரறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் இப்படி பேச்சால் நம்மை ஆட்கொண்டவர்கள் அதிகம்.

தமிழோடு நாம் பயணித்தால் தமிழ் நம்மோடு பயணிக்கும். உலகத்தில் எந்த மூலையில் தமிழ் பேசினாலும் சாதி, சமய வேறுபாடுகள் நீங்கி நம்மவர்கள் என்ற உணர்வு மிளிரும்.

மாவட்டத்திற்கு மாவட்டம் நாம் பேசும் நடை மாறுபடுகிறது. இது நெல்லைத் தமிழ், இது நாஞ்சில் தமிழ், மதுரைத் தமிழ், கொங்கு தமிழ் என மாறுபடுகிறோம்.

நம்மைக் காட்டிலும் இலங்கை, கனடா நாடுகளில் வசிக்கின்ற தமிழ் மக்கள் தூய தமிழ் பேசுகிறார்கள்.

மொழிச் சிதைவு இல்லாமல் நாம் பேசக்கற்றுக் கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள பதினெட்டு சைவத் திருமடங்களில் பல்வேறு ஆகம வகுப்புகள் நடத்தப்படுகிறது. தேவாரம், திருவாசகம் முற்றோதுதல் செய்கிறார்கள்.

நாமும் கந்த பரம்பரை என்று அழைக்கப்படுகின்ற சிவாக்கிர யோகிகள் மடமான பழமையான சூரியனார் கோயில் மடத்தில், பழந்தமிழ்க் காவிரி அறக்கட்டளையினரால் பேசும் கலை பட்டயப்படிப்பு நடத்த விரும்புகிறோம்.

ஆலயங்களில் அருந்தமிழ் ஒலிக்க வேண்டும். அதற்கு நமது சூரியனார் கோயில் திருமடம் ஆன பல முயற்சிகளை மேற்கொள்ளும் என்றார்.

நிகழ்வில் பங்கேற்ற மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ப.அப்துல் சமது பேசும்போது எந்த மண்ணில் எந்த வித்தை ஊன்றினால் அது முளைக்கும் என்பதை அறிந்து, பழந்தமிழ்க் காவிரி அறக்கட்டளையினர் பேசும் கலை பட்டயப்படிப்பை தொடங்கியுள்ளனர்.

4

பேசும் கலை என்பது அரசியல்வாதிகளுக்கு மட்டும் தேவையனது அல்ல. வணிகம் செய்பவர்கள், தொழில் முனைவோர், மருத்துவர்கள் என அனைவருக்கும் தேவை.

ஒரு காலத்தில் அண்ணாவின் பேச்சுக்கு இளைய தலைமுறையினர் ஈர்க்கப்பட்டனர். அதன்பின்பு டாக்டர் கலைஞர் பேச்சால், எழுத்தால், வசன நடையால் நம்மைக் கவர்ந்தார். 90களில் அண்ணன் வைகோ இளைஞர்களிடம் ஒரு மாபெரும் எழுச்சியை ஏற்படுத்தினார்.

நான் அறிய பேசும் கலை என்னும் இந்தப் பட்டயப் படிப்பை முதன் முதலில் தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக் கழகத்துடன் இணைந்து பழந்தமிழ்க் காவிரி அறக்கட்டளை முன்னெடுத்து வருகிறது.

சமய குருவானவர்களை ஒன்றிணைத்து இந்த விழாவை நடத்துவது சாலச்சிறந்தது என்றார்.

"பேசும் கலை" பட்டயப்படிப்பு தொடக்கவிழா,
“பேசும் கலை” பட்டயப்படிப்பு தொடக்கவிழா,

விழாவில் பங்கேற்று திருச்சி மாவட்ட பல்நோக்கு சமூக சேவை மையத்தின் இயக்குநர் அருட்தந்தை ஜான் செல்வராஜ் பேசியது.

பேசும் கலை ஒரு அரிய கலை. இந்தக் கலையை இளம் மாணாக்கர் முதல் முதியவர்கள் வரை அனைவரும் கற்கலாம்.

நாம் பேசுவது எல்லாம் பேச்சு அல்ல. அனைவருக்கும் பொதுவானதாக, நேர்த்தியாக பேசுவது தான் கலை.

அத்தகைய பேச்சுக்கலைக்கு பட்டயப்படிப்பை வழங்க உள்ள தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் தமிழ் வளர் மையத்திற்கும், மணப்பாறை பழந்தமிழ்க் காவிரி அறக்கட்டளைக்கும் பாராட்டுக்கள் என்றார்.

நிறைவாக நோக்க உரையாற்றிய தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் தமிழ்வளர் மைய இயக்குநர் முனைவர் இரா.குறிஞ்சி வேந்தன் பேசியது.

பேசும் கலையின் உயரிய நோக்கம் குறித்து சூரியனார் கோயில் ஆதீனம் அவர்களும், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினரும், அருட்தந்தையும் அழகாக எடுத்தியம்பியுள்ளனர்.

இதுவரை எந்த ஆதீனங்களும் ஏற்க மறுத்த ஒன்றை சூரியனார் கோயில் ஆதீனம் தமது பேச்சில் வெளிப்படுத்தியுள்ளார்.

அதாவது சைவம் தமிழை வளர்த்தது என்பார்கள். கொஞ்சம் வந்து கிறித்தவமும், இசுலாமும் தமிழ் வளர்த்தது என கூறுவார்கள். ஆனால், பௌத்தமும் – சமணமும் தமிழை வளர்த்தது என சூரியனார் கோயில் ஆதீனம் பேசியது வியப்புக்குரியது. அவரது நேர்மைத் திறத்தை பாராட்டுகிறேன்.

பேசும் கலை என்பது மேடையில் பேசுவது மட்டுமல்ல. இல்லத்தில் எப்படி பேசுவது, உறவுகளிடம் எப்படி பேசுவது, என்ன பேசுவது, எப்படி பேசுவது என்பதையெல்லாம் கற்றுத் தந்த பின்பு தான், மேடையில் பேசுவதை பயிற்றுவிக்க முடியும்.

இந்தப் பட்டயப் படிப்பு என்பது பழந்தமிழ்க் காவிரி அறக்கட்டளையுடன் தமிழ்ப்பல்கலைக் கழகம் ஒப்பந்தம் செய்து அறிமுகப்படுத்தியுள்ளது.

மணப்பாறையில் தொடங்கியுள்ள பேசும் கலை பட்டயப் படிப்பு என்பது பழந்தமிழ்க் காவிரி அறக்கட்டளை வாயிலாக சூரியனார் கோயில் மடம், அடுத்து கிறித்தவ பள்ளிகள், இசுலாமிய பாடசாலைகள் என விரிந்து உலகெங்கும் தமது கிளையை பரப்பும்.

நிச்சயம் இந்த பட்டயப்படிப்பு நம்மை உயர்த்தும். நமது தலைமுறையை உயிர்ப்புடன் வைத்திருக்கும் பயிற்சியை வழங்கிடும் என்றார் முனைவர் குறிஞ்சிவேந்தன்.

நிகழ்விற்கு மணப்பாறை சௌமா கல்விக் குழுமங்களின் தலைவர் புரவலர் சௌமா.இராசரத்தினம் தலைமை வகித்தார்.

பேசும் கலை பட்டயப் படிப்பினை நடத்தும் விதம் குறித்து அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் மணவை தமிழ்மாணிக்கம் பேசினார்.

"பேசும் கலை" பட்டயப்படிப்பு தொடக்கவிழா,
“பேசும் கலை” பட்டயப்படிப்பு தொடக்கவிழா,

முன்னதாக நடந்த குறளாலயம் கால்கோள் விழாவினை மணப்பாறை சிந்துஜா மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் பெ.கலையரசன், டாக்டர் இந்துமதி கலையரசன், மருங்காபுரி ஜமீன்தார் சிவசண்முக பூச்சய நாயக்கர், திருக்குறள் புலவர் நாவை.சிவம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

நிகழ்வின் தொடக்கத்தில் பாரதியார் பிறந்த நாளையொட்டி, அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த விழாவில் மருங்காபுரி ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவர் எம்.பழனியாண்டி, மணப்பாறை பசும்பாறை இயக்கத்தின் தலைவர் வழக்கறிஞர் பி.எல்.கிருஸ்ணகோபால், பழந்தமிழ்க் காவிரி அறக்கட்டளையின் செயலாளர் வழக்கறிஞர் ஆ.தமிழ்மணி, பொருளாளர் பாவலர் தாழை ந.இளவழகன், அறங்காவலர்கள் ஆ.துரைராஜ், எம்.கே.முத்துப்பாண்டி, சி.ராஜகோபால், இரா.கார்த்திகேயன், கலைக்கோவன், படிப்பு மைய ஒருங்கிணைப்பாளர் நா.சண்முகம், மறுமலர்ச்சி திமுக மாநில மாணவர் அணிச்செயலாளர் பால.சசிகுமார், மனிதநேய மக்கள் கட்சியின் அமைப்புச் செயலாளர் காதர் மைதீன், தமிழ்நாடு அரசின் மாற்றுத் திறனாளிகள் நலவாரிய உறுப்பினர் சாந்திவனம் அரசப்பன், புரவலர்கள் எம்.தங்கவேலு, எம்.ஆர்.பாலுசாமி, வைகோ பழனிச்சாமி, சி.பீட்டர், ப.சுப்ரமணியன், மேட்டுக்கடை பொ.சண்முகம், டி.வி.எஸ். பொன்னுச்சாமி, பூங்குடி சின்னையா, நா.ரேணுகாதேவி, சுடலைமுத்து, பூமிநாதன், ஆர்.ராமன், பி.பிரபு, ஆரோக்கிய ரெக்ஸ், மஞ்ச் முஜிபுர் ரஹ்மான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

சந்தா 1
Leave A Reply

Your email address will not be published.