
கல்லணை அருகே கொலை… திருச்சி நபர் கைது
திருச்சி,டிச.12-
கல்லணை அடுத்த உய்யக்கொண்டான் வடிகால் வாய்க்காலில் வாலிபர் உடல் அழுகிய நிலையில் கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தோகூர் போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார் வாய்க்கால் பகுதி பூங்காவில் இருந்து இருசக்கர வாகனத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த இருசக்கர வாகனம் திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகா திண்ணியம் மெயின்ரோடு கீழஅன்பில் பகுதியை சேர்ந்த பாஸ்கரன் என்பவருக்கு சொந்தமானது என்பதும், இறந்து கிடந்தவர் அவர் தான் என்பதும் தெரியவந்தது.

பாஸ்கரன் செல்போனை சோதனை செய்ததில் அவருடன் கடைசியாக பேசியது திருச்சி மாவட்டம் பிச்சாண்டார்கோவில் வடக்கு கள்ளர் தெருவை சேர்ந்த ஆகாஷ் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடித்து வந்து விசாரணை நடத்தினர். அதில் சென்னையில் பாஸ்கரன் டிஜிட்டல் போர்டு வேலை பார்த்து வந்துள்ளார்.
அவரது பாட்டி ரெங்கம்மாள் வீடு, ஆகாஷ் வீட்டுக்கு அருகில் உள்ளது.
அடிக்கடி அங்கு வந்த பாஸ்கரன், ஆகாஷ் அக்காவுடன் பழகி வந்துள்ளார். இதனால் ஆகாஷின் அக்கா வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதனால் பாஸ்கரனை தீர்த்துக்கட்ட ஆகாஷ் முடிவு செய்தார். இதைதொடர்ந்து பாஸ்கரனை சென்னையில் இருந்து தோகூர் வரவழைத்து இருவரும் மது அருந்தினர்.

பின்னர் அரசங்குடி அங்காள பரமேஸ்வரி கோயில் அருகில் உள்ள உய்யக்கொண்டான் வடிகால் வாய்க்கால் நீரில் பாஸ்கரனை அமுக்கி ஆகாஷ் கொலை செய்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து ஆகாஷை திருவையாறு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
