
காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதம்மா…
மேயரின் வருகை தாமதம் ஆனதால் அன்னதானம் வாங்க குவிந்திருந்த நோயாளிகள் மற்றும் அவர்தான் உறவினர்கள் பெரும் அவதியுற்றனர்.
திருச்சி தொழிலதிபர் அருண் நேரு பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி அரசு பொது மருத்துவமனை முன்பாக திமுக சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
தென்னூர் ராம்குமார் என்ற திமுக நிர்வாகியின் ஏற்பாட்டின் அடிப்படையில் அன்னதானத்துக்கு வழங்குவதற்கான உணவுகள் தயார் நிலையில் கொண்டு வந்து வைக்கப்பட்டன.
காலை 10 மணிக்கு அன்னதானத்தை மேயர் அன்பழகன் தொடங்கி வைப்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதை பார்த்த அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மற்றும் உறவினர்கள் அன்னதானத்தில் உணவு வாங்கிக் கொள்ளலாம் என்று 10 மணியிலிருந்து அன்னதானம் வழங்கும் இடத்தில் குவிந்தனர்.


ஆனால் திங்கள்கிழமை தோறும் மாநகராட்சியில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும் என்பதால் மாநகர மேயர் குறைதீர் கூட்ட நிகழ்ச்சியில் இருந்தார் இதனால் அவரால் 10 மணிக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைக்க வர இயலவில்லை.
இதோ மேயர் வந்துவிடுவார் ..இதோ மேயர் வந்து விடுவார் என்று தகவலை தெரிவித்த நிர்வாகிகள் ஒரு கட்டத்துக்கு மேல் பொறுமை இழந்து விட்டனர்.
காத்திருந்த நோயாளிகளும் அவர்களது உறவினர்களும் வெறுத்தே போயினர்.
ஒரு வழியாக ஒன்று முப்பது மணி அளவில் அன்னதானம் வழங்கும் இடத்துக்கு வந்த மேயர் கம்பீரதாயமாக சிலருக்கு அன்னதான பொட்டலங்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்களை வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
முறையான வரிசை ஏற்பாடு செய்யவில்லை என்பதால் அன்னதானம் வாங்கும் இடத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு கைகளை நீட்டி அன்னதானத்தை பெற போராடினர்.
மேயரின் வருகை மிக மிக தாமதமானதால் நோயாளிகள் மற்றும் உறவினர்கள் பெரிதும் மன உளைச்சலுக்கு உள்ளாகினர் என்பதே நிதர்சனமாகும்.
