
பெரம்பலூரில் கொலை வழக்கில் குற்றவாளி திருச்சியில் கைது
பெரம்பலூரில் நடந்த கொலை வழக்கில் தொடர்புடைய வாலிபர்கள் திருச்சியில் சிக்கினர்.
தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தத்தைச் சேர்ந்த பழனியின் மகன் கமலஹாசன். மனைவியுடன் சிறுவாச்சூர் பகுதியில் வசித்து வந்தார்.
இவர் பெரம்பலூர் மாவட்டம் விஜய கோபாலசமுத்தில் உள்ள எம்ஆர்எப் டயர் தொழிற்சாலையில் ஒப்பந்த ஊழியராக கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக வேலை பார்த்தார்.

பெரம்பலூர் அருகே புது நடுவலூர் ஆதிதிராவிடர் தெருவில் உள்ள மாரியம்மன் கோவில் முன்பு நேற்று அதிகாலை அவர் படுகொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். சம்பவ இடத்துக்கு வந்த பெரம்பலூர் போலீசார் விசாரணை செய்து வந்தனர்.
இந்நிலையில் சமயபுரம் அருகே பணமங்கலம் பகுதியில் உள்ள திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் இரண்டு வாலிபர்கள் நின்று கொண்டு இருந்தனர். அப்போது அங்கு ரோந்துப் பணியில் இருந்த கொள்ளிடம் போலீசார் வாலிபர்களை பிடித்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் பெரம்பலூர் அருகே புது நடுவலூர் பகுதியைச் சேர்ந்த 24 வயதான கார்த்திக் மற்றும் 24 வயதான மனோஜ் என தெரியவந்தது. மேலும் டயர் தொழிற்சாலை ஊழியர் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் என தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் பெரம்பலூர் மாவட்ட போலீசாரிடம் கொள்ளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
