தானியங்கி நீர் நிலை எச்சரிக்கை கருவி – பள்ளி மாணவர்கள் செயல் விளக்கம் !

தானியங்கி நீர் நிலை எச்சரிக்கை கருவி
திருச்சி தென்னூர் நடுநிலைப்பள்ளி, திருச்சிராப்பள்ளி புத்தூர் கிளை நூலக வாசகர் வட்டம், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை இணைந்து தானியங்கி நீர்நிலை எச்சரிக்கை கருவி செயல் விளக்க நிகழ்வு பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
பள்ளி தலைமை ஆசிரியர் விமலா தலைமை வகித்தார். திருச்சி புத்தூர் கிளை நூலக வாசகர் வட்ட தலைவர் விஜயகுமார், நூலகர் புகழேந்தி, முன்னாள் தலைமை ஆசிரியர் ராகவன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

எட்டாம் வகுப்பு படிக்கும் முகமது ரியாஸ் காளீஸ்வரன் தானியங்கி நீர்நிலை எச்சரிக்கை கருவி குறித்து பேசுகையில்,
தானியங்கி நீர் நிலை எச்சரிக்கை கருவி என்பது ஒரு கருவி மூலம் தானாகக் கட்டுப்படுத்த உருவாக்கப்பட்ட ஒரு தயாரிப்பு ஆகும், இது ஒரு நிலையான நீர் இருப்பை உறுதிப்படுத்த உதவுகிறது. இந்த தானியங்கி நீர் நிலைக் கட்டுப்படுத்திகள், நீர்மட்டத்தைக் கண்காணிக்க பயன்படுகிறது.

ஆறு அல்லது ஏரி போன்ற நீர்நிலைகளில் உள்ள நீர் மிகையாகும் போது அல்லது கரை உடையும் போது அது தனது வழக்கமான எல்லைகளைத் தாண்டுகிறது. நீரோட்டத்தின் வலிமையானது மிகவும் அதிகரிக்கின்ற போது ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படும். அது ஆற்றின் பாதையைத் தாண்டி பெருக்கெடுத்து ஓடி கரையோரம் ஒட்டி அமைந்துள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு சேதம் உண்டாக்குகிறது.
நீர் நிலைகளில் ஒரு குறிப்பிட்ட மட்டத்திற்கு மேல் நீர் வரும் போதெல்லாம் தானியங்கி நீர் நிலைக் கட்டுப்படுத்திகள் எச்சரிக்கை ஒலியினை எழுப்பும். தானியங்கி எச்சரிக்கை ஒலித்தவுடன் அணை மதகினை திறக்கலாம் இதனால் பேரிடரை தவிர்க்கலாம் என்றனர்.
