
சாலையில் கிடந்த குழந்தை.. தாயான கல்லூரி மாணவி சாவு
திருச்சி மாவட்டம் ஜீயபுரம், முக்கொம்பு அருகே ராமவாத்தலை வாய்க்கால் கரையில் கடந்த 5-ம்தேதி குழந்தை அழுகுரல் கேட்டது. இது குறித்த தகவலின் பேரில் ஜீயபுரம் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று பார்த்தபோது, அங்கு பிறந்து சில மணி நேரமே ஆன நிலையில் ஆண் குழந்தை ஒன்று கிடந்தது.
அதிர்ச்சியடைந்த போலீசார் குழந்தையை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் வார்டில் சேர்த்தனர். குழந்தைக்கு அங்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு,பராமரிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், எலமனூர் பகுதியைச் சேர்ந்த செல்வமணி மகள் கலைவாணி (19) என்ற கல்லூரி மாணவி திடீரென விஷம் உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாகவும், அவரும் திருச்சி மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

போலீசார் மேற்கொண்ட தொடர் விசாரணையில், ஆற்றங்கரையில் கிடந்தது கல்லூரி மாணவி கலைவாணியின் குழந்தை எனத் தெரியவந்தது. மாணவிக்கு திருமணத்துக்கு முன்பே இக்குழந்தை பிறந்ததாகவும், வெளியே தெரியாமல் மறைக்க குழந்தையை ஆற்றங்கரையில் வீசியதும் தெரியவந்தது.
ஆபத்தான நிலையில் கல்லூரிமாணவி கலைவாணி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

முன்னதாக நீதிபதியிடம் கலைவாணி அளித்த மரண வாக்குமூலத்தில் தனக்கு வாயில் விஷம் ஊற்றி விட்டதாக தெரிவித்தார். அதன் அடிப்படையில் போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
