
கலெக்டர் அலுவலகத்தில் வேலை.. டுபாக்கூர் ஆசாமிக்கு போலீஸ் வலை!
திருச்சி மாவட்டம் துறையூர் வேணு சந்தையை சேர்ந்தவர் சங்கர் மகன் அரவிந்த் குமார் (23). பி. எஸ். சி படித்த இவர், சமயபுரம் டோல் பிளாசாவில் பாஸ்டாக் ரீசார்ஜ் செய்து தரும் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் பச்சபெருமாள்பட்டி தெற்கு தெருவை சேர்ந்த விஜய் ஆனந்த் என்பவர் சமயபுரம் டோல் பிளாசாவிற்கு வரும்பொழுது, அரவிந்த் குமாருக்கு அறிமுகம் ஆகியுள்ளார். அப்பொழுது திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தான் பணிபுரிந்து வருவதாகவும், தற்சமயம் அங்கு பதிவறை எழுத்தர் வேலைக்கு ஆட்கள் எடுப்பதாகவும், நீங்கள் பணம் கொடுத்தால், தனக்குத் தெரிந்த தலைமை செயலகத்தில் பணிபுரியும் உயர் அதிகாரிகள் மூலமாக வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார்.

இதனை உண்மை என நம்பிய அரவிந்த் குமார் மற்றும் அவரது நண்பர்கள் ஐந்து பேர் பல்வேறு தவணைகளில் நேரடியாகவும், வங்கி பரிமாற்றத்தின் மூலமாகவும் சுமார் 16 லட்சம் வரை பணம் கொடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பணம் கொடுத்து நீண்ட நாட்கள் ஆகியும் விஜய் ஆனந்த் வேலை வாங்கி தராததால், இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விசாரித்தபோது, அங்கு பதிவறை எழுத்தர் வேலைக்கு ஆட்கள் எடுக்கப்படவில்லை என தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து, ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அரவிந்த் குமார், கொடுத்த பணத்தை பலமுறை விஜய் ஆனந்திடம் கேட்டும் தராததால், இது தொடர்பாக துறையூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இப்புகாரின் பேரில் துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட விஜய் ஆனந்தை வலை வீசி தேடி வருகின்றனர்.
