திருச்சியில் 1.65 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் அமைச்சர்!

திருச்சியில் 1.65 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் அமைச்சர்!
நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று (16.12.2022) திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம், புங்கனூர் கிராம ஊராட்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்ற விழா நிகழ்வில், புங்கனூர் முதல் அல்லித்துறை வரை ரூபாய் 1.65 கோடி மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 50 ஆயிரம் பனை விதைகளை நடும் விழாவில் சாலை ஓரங்களில் பனை விதைகளை நட்டு பணிகளைத் தொடங்கி வைத்தார்.
மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம், புங்கனூர் ஊராட்சி சுமார் 10,000 மக்கள் தொகை கொண்டது. அல்லித்துறை புங்கனூர் சாலை 3கி.மீ நீளம் கொண்டது. இச்சாலை இணைப்பு சாலையாக சோமரசம் பேட்டை, அல்லித்துறை, அதவத்தூர் குமாரவயலூர் ஊர்களுக்கு உள்ளது.

இச்சாலை கிட்டதட்ட 10 கீ.மி சுற்றி பயணம் செய்து திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலைக்கு வர வேண்டிய சூழல் இருந்தது. இச்சாலையினை தினமும் சுமார் 8000 முதல் 10000 பேர் வரை பயன்படுத்துகின்றனர். மேலும், குமார வயலூர் முருகன் கோவில் திருவிழா காலங்களில் இச்சாலையினை சுமார் 50000 பேர் வரை பயன்படுத்துகிறார்கள். இச்சாலையினை பலப்படுத்தி மேம்பாடு செய்வதால் சோமரசம் பேட்டை, அல்லித்துறை, அதவத்தூர் குமாரவயலூர் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் பயணம் 1மணி நேரம் குறைகிறது.

மேலும், மாணவர்கள் தங்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு போகவும், விவசாயிகள் தங்கள் விவசாய ஈடுபொருட்கள் மற்றும் சந்தைபடுத்தவும், மக்கள் மருத்துவமணைகளுக்கு செல்லவும் பயன்படும் என்ற உயரிய நோக்கில் இச்சாலையினை பலப்படுத்துதல் மற்றும் மேம்பாடு ரூபாய் 1.65 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் இன்று(16.12.2022) தொடங்கி வைத்து பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 50 ஆயிரம் பனை விதைகளை நடும் விழாவைத் தொடங்கி வைத்து புங்கனூர் முதல் அல்லித்துறை வரை சாலை ஓரங்களில் பனை விதைகளை நடும் பணிகளைத் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில், வணக்கத்திற்குரிய மாநகராட்சி மேயர் அன்பழகன், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் எம்.பழனியாண்டி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தேவநாதன், உதவி இயக்குனர்; ஊராட்சிகள் எஸ்.கங்காதாரிணி, மணிகண்டம் ஒன்றிய குழு தலைவர், கமலம் கருப்பையா, புங்கனூர், ஊராட்சி மன்ற தலைவர் ஜி.தாமோதரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
