
காவல் நிலைய பைக்கில் படமெடுத்த பாம்பு!
பாம்பு என்றால் படையே நடுங்கும் என்று பழமொழியில் குறிப்பிடுவார்கள் படையே நடுங்கும் போது போலீஸ்காரர்கள் எம்மாத்திரம்…
முசிறி சட்டம் ஒழுங்கு E1காவல் காவல் நிலையத்தில் பல்வேறு சம்பவங்களில் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள் ஓரங்கட்டி நிறுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு ஓரங்கட்டி நிறுத்தப்பட்டிருந்த ஒரு பைக்கில் சாரைப்பாம்பு ஒன்று நேற்று ஏறி விளையாடியது.

இதைக் கண்ட பொதுமக்கள் மற்றும் போலீஸ்காரர்கள் பாம்பை பிடிக்க முயற்சி செய்தனர். டிமிக்கி கொடுத்த பாம்பு பெட்ரோல் டேங்குக்குள் புகுந்து கொண்டது. பாம்பை வெளியில் எடுக்க போலீசார் எவ்வளவோ முயற்சி செய்தும் இயலவில்லை.
இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பாம்பை பிடிக்க எடுத்த முயற்சியும் பயன் இல்லாமல் போனது. இதை அடுத்து போலீசார் அந்த பைக்கை அருகில் இருந்த வாட்டர் சர்வீஸ் சென்டருக்கு கொண்டு சென்று தண்ணீரை வேகமாக பிய்ச்சி அடித்து பாம்பை வெளியே கொண்டு வர முயற்சி செய்தனர். அந்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது.

பின்னர் மெக்கானிக் ஒருவர் வரவழைக்கப்பட்டு பெட்ரோல் டேங்க் அகற்றப்பட்டது. அப்போது பாம்பு ஆக்ரோஷத்துடன் வெளியே வந்தது.
இதனால் அச்சமடைந்த அங்கிருந்த வாலிபர் ஒருவர் கையில் இருந்த குச்சியால் பாம்பை அடித்துக் கொன்றார். இச்சம்பவம் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
