
சமயபுரம் கோவிலில் மகளிர் துயர் துடைக்கும் போலீஸ் வித்தியாசமான அணுகுமுறைக்கு பாராட்டுகள் குவிகிறது!
கையில் குழந்தையுடன் நீண்ட வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்யும் மகளிரின் துயர் துடைக்கும் வகையில் சமயபுரம் போலீசார் மேற்கொண்டுள்ள வித்தியாசமான அணுகுமுறை பொதுமக்களின் பாராட்டை பெற்றுள்ளது.
அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவிலாகும். தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், அம்மனை தரிசனம் செய்து வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர். விசேஷ மற்றும் விடுமுறை நாட்களில் இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர்.

இந்நிலையில் குழந்தைகளுடன் வரும் பெண்கள் அவதிக்கு உள்ளாவதை கண்ட சமயபுரம் காவல் ஆய்வாளர் கருணாகரன், தனிப்பிரிவு எஸ் ஐ ஜெயசீலன், முதல்நிலை காவலர் பாண்டியராஜன் உள்ளிட்ட போலீசார் இதற்கு ஒரு தீர்வு காண முடிவு செய்தனர்.

இதனை தொடர்ந்து குழந்தைகளுடன் வரும் பெண்கள், குழந்தைகளுக்கு உணவு ஊட்ட தேவையான வசதிகள் மற்றும் குழந்தைகளுக்கு பொழுது போக்குவதற்கான விளையாட்டுப் பொருட்கள் ஆகியவற்றை வாங்கி அதற்கென ஒரு தனி இடம் ஏற்பாடு செய்து வைத்துள்ளனர்.
இதன் காரணமாக தற்போது சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு குழந்தையுடன் வரும் பெண்கள், குழந்தைகளுடன் நீண்ட வரிசையில் காத்திருக்காமல் ஓரிடத்தில் அமர்ந்து குழந்தைக்கு தேவையான உணவு அளிப்பதோடு,அங்கிருக்கும் விளையாட்டு பொருள்களை குழந்தைகளுக்கு கொடுத்து இளைப்பாறிய பின்பு சரியான நேரத்திற்கு சென்று சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர்.
குழந்தைகளுக்கு அறிவுப்பூர்வமான விஷயங்களை விளக்கும் வகையில் வகையில், மேற்கொள்ளப்பட்டுள்ள வித்தியாசமான இந்த முயற்சியை
பொதுமக்கள் நன்றியோடு பாராட்டுகின்றனர்…
