
டிராக்டரில் இருந்து தவறி விழுந்தவர் பலி
திருச்சி மாவட்டம் சில்லக்குடியை சேர்ந்தவர் ரெங்கராஜ் மகன் பாலசுப்பிரமணியம்(19). இவரும், பிரதீப்(20) என்பவரும் நண்பர்கள். நேற்று காலை அதே பகுதியை சேர்ந்த தேவேந்திரன் என்பவர் எம்சாண்ட், சிமெண்டு ஏற்றிக்கொண்டு சிறுகனூர் அருகே உள்ள நம்புகுறிச்சியில் இருந்து கல்லகம் நோக்கி டிராக்டரில் சென்று கொண்டிருந்தார்.

அந்த டிராக்டரில் பாலசுப்பிரமணியம், பிரதீப் ஆகியோர் அமர்ந்திருந்தனர். நம்புகுறிச்சியில் இருந்து கல்லகம் செல்லும் சாலையில் உள்ள நந்தியார்பாலம் அருகே இருந்த பள்ளத்தில் சென்றபோது, டிராக்டரில் இருந்து எதிர்பாராதவிதமாக பாலசுப்பிரமணியம் தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
சிறுகனூர் போலீசார், டிராக்டரை ஓட்டிச் சென்ற தேவேந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
