
திருச்சியில் ஏ.ஐ.டி.யு.சி சார்பில் 6 இடங்களில் மறியல்.. நூற்றுக்கணக்கனோர் கைது!
ஊராட்சி முதல் மாநகராட்சிகள் வரை துப்புரவு பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலியை வழங்க மறுப்பதை கண்டித்தும், புதிய நியமனங்கள் இல்லாததை கண்டித்தும், 240 நாட்கள் பணிபுரிந்தால் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். எந்த தொழிலில் பணிபுரிந்தாலும் 21,000 மாத ஊதிய வழங்க வேண்டும்.
ஈ.பிஎஸ்.95 மற்றும் நல வாரியங்களில் மாதம் 6 ஆயிரம் ரூபாய்க்கு குறையாமல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். நலவாரிய பதிவுகளை எளிமைப்படுத்தி தாமதம் இல்லாமல் நிதி பயன்களை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசின் தொழிலாளர் விரோத , நான்கு சட்ட தொகுப்புகளையும் எதிர்த்து தமிழகம் முழுவதும் ஏ.ஐ.டி.யு.சி சார்பில் இன்று மறியல் போராட்டம் நடந்தது.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் பெரியார் சிலை அருகில் இன்று (24.01.2023) ஏ.ஐ.டி.யு.சி சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தேசிய செயலாளர் வகிதா நிஜாம், மாவட்ட பொதுச் செயலாளர் சுரேஷ் ஆகியோர் தலைமையில் ஊர்வலமாக சென்று மறியலில் ஈடுபட முயன்றனர்.
பெரியார் சிலையில் இருந்து திருச்சி ஜங்ஷன் நோக்கி ஊர்வலமாக புறப்பட்ட போராட்டக்காரர்களை காமராஜர் சிலை அருகாமையில் போலீசார் மடக்கி கைது செய்தனர்.

இந்த போராட்டத்தை தேசிய கட்டுப்பாட்டு குழுசெல்வராஜ் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் தரைக்கடை சங்க பொதுச் செயலாளர் அன்சர்தீன்,மாவட்ட துணை தலைவர்கள் சிவா, நேருதுரை, திராவிட மணி உள்பட ஏராளமான கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் கோஷங்களை எழுப்பி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர். இதனால் மத்திய பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதேபோல் திருவெறும்பூர், சோமரசம்பேட்டை, மணப்பாறை. துறையூர், வையம்பட்டி ஆகிய இடங்களிலும் மறியல் போராட்டம் நடந்தது. இந்த மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
