
திருச்சியில் சொகுசு காரை விற்பதாக கூறி ரூ. 6 லட்சம் மோசடி!
திருச்சி அரியமங்கலம் காமராஜ் நகர் அண்ணா தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஆதம் பாவா (வயது 62). இவர் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 4 சக்கர வாகனங்களை வாங்கி விற்பனை செய்து வந்தார்.

இந்நிலையில் கோவையைச் சேர்ந்த இப்ராஹிம், அசர் மற்றும் 4 பேர் அவரை சந்தித்து ஒரு புதிய இனோவா கார் விற்பனைக்கு உள்ளதாக தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து ஆதம் பாவா அந்தக் காரை ரூ.6 லட்சத்துக்கு விலை பேசி பணத்தை கொடுத்ததாக கூறப்படுகிறது.
பின்னர் அந்த 4 மர்ம ஆசாமிகளும் ஆர்.சி புக் ,இன்சூரன்ஸ் உள்ளிட்ட ஒரிஜினல் ஆவணங்களுடன் காரை ஒப்படைப்பதாக கூறி அங்கிருந்து சென்றனர். பின்னர் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது கார் தொலைந்து விட்டதாக தெரிவித்தனர். அதன் பின்னர் அனைவரின் செல்போன்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டன.
இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கொண்ட ஆதம்பாவா திருவெறும்பூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் கோவையைச் சேர்ந்த இப்ராஹிம், அசர் உள்ளிட்ட 4 பேர் மீதும் மோசடி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சொகுசு காரை விற்பனை செய்வதாக கூறி புரோக்கரிடம் ரூ. 6 லட்சம் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
