
சுதந்திரத்தின் பெருமையை வலியுறுத்தும் விதமாக மூவர்ண பலூன்களை பறக்க விட்ட திருச்சி மாவட்ட ஆட்சியர்!
திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இன்று (26.01.2023) நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி, மூவர்ணத்திலான பலூன்களைப் பறக்கவிட்டார்.
இதனைத் தொடர்ந்து காவல்துறையின் அணிவகுப்பு மாியாதையினை ஏற்றுக்கொண்டு அணிவகுப்பினைப் பார்வையிட்டார்.

பின்னா் காவல் துறையில் மாநகர் மற்றும் மாவட்டத்தில் சிறப்பாகப் பணியாற்றிய 98 காவலர்களுக்கு முதலமைச்சர் பதக்கத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கிப் பாராட்டினார்.

இதனைத் தொடர்ந்து வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, மாநகராட்சி, பேரூராட்சிகள், நகராட்சிகள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, பள்ளிக்கல்வித்துறை, வேளாண்மைத்துறை, காவல் துறை, போக்குவரத்துத்துறை, உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய 301 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கிப் பாராட்டினார்.
நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட தியாகிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசினை வழங்கினார்.
பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், சாகச நிகழ்ச்சிகள் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் சார்பில் தீ விபத்தின் போது மேற்கொள்ள வேண்டிய செயல் முறைகள் குறித்து செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. கலைநிகழ்ச்சிகளில் பங்பேகற்ற அனைவருக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் நினைவு பரிசினை வழங்கிப் பாராட்டினார்.
முன்னதாக குடியரசு தினவிழாவையொட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் திருச்சிராப்பள்ளி காந்தி மார்க்கெட் அருகில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
இவ்விழாவில், காவல் துறை மத்திய மண்டல (திருச்சி) தலைவர் க.கார்த்திக்கேயன், திருச்சிராப்பள்ளி மாநகர காவல் ஆணையர், எம்.சத்தியப்பிரியா, மாவட்ட வருவாய் அலுவலர் இரா.அபிராமி, திருச்சிராப்பள்ளி வருவாய் கோட்டாட்சியா் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
