மாநிலம் முழுவதும் அரசு பள்ளிகளில் ரூ.7500 கோடியில் புதிய கட்டடங்கள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!
மாநிலம் முழுவதும் அரசு பள்ளிகளில் ரூ.7500 கோடியில் புதிய கட்டடங்கள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!
மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில், பேராசிரியர் அன்பழகன் கல்வி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.7,500 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பள்ளிக்கட்டடங்கள் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
திருச்சி, செந்தண்ணீர்புரம், மாநகராட்சி உயர் நிலைப்பள்ளியில் நடைபெற்ற, தேசிய பெண் குழந்தைகள் தின விழா நிகழ்வில், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து மேலும் பேசியதாவது :-
தமிழகத்தில் சுமார் 25 லட்சம் பேர் பள்ளிகளில் பொதுத்தேர்வு எழுதவுள்ளனர். இதில் மாணவர்களும் அதிகமதிப்பெண்கள் பெறவேண்டும். இங்கே எடுக்கப்பட்ட தேசிய பெண்குழந்தைகள் தின உறுதிமொழிக்கேற்ப, அனைவருக்கும் பெண் குழந்தைகளை உருவாக்கும் கடமை உள்ளது, இதை ஆண்டுகள் உறுதி செய்ய வேண்டும்.

அடுத்த கல்வியாண்டில் ஜூன் மாதத்திலேயே பள்ளிகளில் வழங்கப்படும் விலையில்லா பொருட்கள் வழங்கப்படும். கிராமப்புறம் மட்டுமின்றி மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் தேவையான கட்டடங்கள், சோதனைக் கூடங்கள், சமையலறைகள், கழிப்பிட வசதிகள் மற்றும் சுற்றுச்சுவர்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் மேம்படுத்தப்படும்.
அந்த வகையில் முதல் நிகழ்ச்சியாக பிப்ரவரி 1 ஆம் தேதி காட்பாடியில் நடைபெறும் விழாவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பங்கேற்று புதிய பள்ளிக்கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார்.

முதல்கட்டமாக இப்பணிகளுக்கென ரூ. 240 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து 204 தொகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளுக்கு தேவையான கட்டடங்கள் அமைத்து தரப்படும். பேராசிரியர் அன்பழகன் கல்வி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 750 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, படிப்படியாக அனைத்துப் பள்ளிகளிலும் கட்டட வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றார்.
பெண் குழந்தைகள் பாதுகாப்புக் குறித்து பள்ளி மாணவ, மாணவியரிடையே நடைபெற்ற பேச்சு,கவிதை,கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை அமைச்சர் பாராட்டி பரிசுகளை வழங்கினார். தேசிய பெண்குழந்தைகள் தின உறுதிமொழியும் ஏற்கப்பட்டது. பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடவுசெய்யப்பட்டன.
இந்நிகழ்வில், மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தலைமை வகித்துப் பேசினார். மாவட்ட சமூகநல அலுவலர் நித்யா, மாவட்ட திட்ட அலுவலர்பொ.ரேணுகா, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர்ர.தஸ்தகீர், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்பேபி, மக்கள் சக்தி இயக்கம் கே.சி நீலமேகம் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
