திருச்சியில் தொடர் திருட்டு.. மாநகராட்சி பள்ளியிலும் மர்ம நபர்கள் கைவரிசை!
திருச்சியில் இரண்டு அம்மன் கோவில்களில் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பகவதி அம்மன் கோவில்
திருச்சி கீழப்புதூரில் பாலக்காட்டு பகவதி அம்மன் கோவில் உள்ளது இந்த கோவிலில் நேற்று இரவு பூஜைகளை முடித்துவிட்டு கோவில் பூசாரி வீட்டுக்கு சென்று விட்டார். காலையில் வந்து பார்த்தபோது கோவில் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது உண்டியலை உடைத்து, அதில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.
இதுகுறித்து காஜா பேட்டையை சேர்ந்த மதுரை வீரன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் பாலக்கரை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புத்தூர் குழுமாயி அம்மன் கோவில்
இதேபோல் புத்தூர் குழுமாயி அம்மன் கோவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் 30 கிராம் வெள்ளி மற்றும் பூஜைப் பொருட்களை திருடி சென்று விட்டனர்.

இதுகுறித்து புத்தூர் குழுமாயி அம்மன் கோவில் செயல் அலுவலர் புனிதா திருச்சி அரசு மருத்துவமனை போலீசில் புகார் கொடுத்தார் .புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாநகராட்சி பள்ளியில் கைவரிசை
இரண்டு அம்மன் கோவில்களை தொடர்ந்து திருச்சி காஜா பேட்டையில் உள்ள மாநகராட்சி பள்ளியிலும் மர்ம நபர்கள் தங்கள் கை வரிசையை காட்டியுள்ளனர்.
திருச்சி பாலக்கரை காஜா பேட்டையில் மாநகராட்சி தொடக்கப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியை கடந்த27-ந் தேதி தலைமை ஆசிரியர் பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலையில் வந்து பார்த்தபோது பள்ளியின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது லேப்டாப் இரண்டு மற்றும் டி.வி.டி பிளேயர், மைக் செட், வாளி மற்றும் பொருள்களை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.
இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியை சித்ரா பாலக்கரை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
கார் கண்ணாடியை உடைத்து திருட்டு
இதேபோல் திருச்சி தில்லை நகர் சாஸ்திரி சாலையில் துவரங்குறிச்சியை சேர்ந்த அல்லாபக்ஸ் என்பவர் தனது காரை நிறுத்தி இருந்தார். அந்த காரை உடைத்த மர்ம நபர்கள் உள்ளே இருந்த சாம்சங் டேப்பை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து அல்லாபக்ஸ் கொடுத்த புகாரின் பேரில் தில்லைநகர் போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
