திருச்சியில் இரவு நேரங்களில் டீ,டிபன் கடைகள் நடத்த அனுமதிக்க வேண்டும் – வலுக்கும் கோரிக்கை !
திருச்சியில் இரவு நேரங்களில் டீ,டிபன் கடைகள் நடத்த அனுமதிக்க வேண்டும். போலீஸ் கமிஷனரிடம் மனிதநேய மக்கள் கட்சி மனு
இரவு நேர டீ, பால் மற்றும் டிபன் கடை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியினர் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் அப்துல் சமத் மற்றும் நிர்வாகிகள் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
திருச்சி மாநகரின் மதுரை ரோட்டில் ஆசிய கண்டத்திலேயே பிரசித்தி பெற்ற வழிபாட்டு புனித தலங்களில் ஒன்றான ஹஜ்ரத் தப்லே ஆலம் பாதுஷா நத்ஹர்வலி என்ற பெயரில் உள்ள நத்தர்ஷா பள்ளிவாசலுக்கு கேரளா, கர்நாடகா,ஆந்திரா, உத்திரப்பிரதேஷ், மத்தியப்பிரதேஷ் என இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் உடல் ஊனமுற்றோர், நோய்வாய்ப்பட்டோர், மனநலம் குன்றியவர்கள், பெரியவர்கள், சிறியவர்கள் மற்றும் தாய்மார்கள்குழந்தைகளுடன் தரிசிக்க வருகிறார்கள்.

மேலும் இரவு நேரங்களில் பசியைப் போக்கிட மற்றும் குழந்தைகளுக்கு பால் மற்றும் பிஸ்கட் வாங்க கடைகள் இருந்தும் கோட்டை காவல்துறையினரின் கெடுபிடியால் இரவு 10 மணிக்குள் கடைகளை அடைக்கசொல்லி வற்புறுத்துகிறார்கள்.
ஆகவே வழிபாட்டு தலத்திற்கு அருகில் யாத்ரீக மக்களுக்கு வசதியாக இரவு நேரத்தில் டீ, பால் மற்றும் டிபன்கடை நடத்த அனுமதி தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
