துறையூர் அருகே பழைய வீட்டில் கிடந்த 4 கிலோ எடையுள்ள சாமி சிலை!
துறையூர் அருகே ஒருவர் தான் புதிதாக வாங்கிய பழைய வீட்டில் கிடைத்த உலோக சாமி சிலையை போலீசில் ஒப்படைத்தார்.
திருச்சி மாவட்டம் துறையூர் அருகேயுள்ள ஒக்கரை மேற்கு தெருவைச் சேர்ந்தவர் ராஜூ மகன் நாகராஜன்(44). இவர் தச்சு வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் முத்துசாமி என்பவரிடம் சிக்கத்தம்பூர் பட்டவன் கோவில் அருகே பழைய ஓட்டு வீடு ஒன்றை வாங்கியுள்ளார்.

அந்த வீட்டிலிலிருந்த சிமெண்ட் தொட்டியில் ஒரு அடி உயரத்தில் பித்தளை உலோகத்திலான சிலை துணியால் சுற்றப்பட்டு குச்சி பையிள் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அதை இடத்தின் உரிமையாளர் எடுத்து உப்பிலியபுரம் போலீசில் ஒப்படைத்தார்.
உப்பிலியபுரம் போலீசார் சிலையை ஆய்வு செய்தபோது 4 கிலோ எடையுள்ள சிலையின் முன்புறம் சக்கரத்தாழ்வார் உருவமும் பின் பக்கம் நரசிம்மர் உருவமும் இருந்துள்ளது.

இது குறித்து போலீசார் சிலை எங்கிருந்து திருடப்பட்டது எந்த கோயிலுக்கு சொந்தமான சிலை மர்ம நபர்கள் எவரேனும் திருடி கொண்டு வந்து போலீசாருக்கு பயந்து தூக்கி போட்டுவிட்டு சென்று விட்டனரா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.
தனியார் இடத்தில் சாமி சிலையை கண்டெடுக்கப்பட்டது அப்பகுதி மக்களிடையே பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது
