மதுரை நாயக்கர் காசுகளில் கடவுள்கள் சிறப்பு சொற்பொழிவு
திருச்சிராப்பள்ளி புத்தூர் கிளை நூலக வாசகர் வட்டம், பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் மதுரை நாயக்கர் காசுகளில் கடவுள்கள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நூலகத்தில் நடைபெற்றது.
திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார்.
நாணயவியல் சேகரிப்பாளர் பாண்டியன் மதுரை நாயக்கர் காசுகளில் கடவுள்கள் தலைப்பில் பேசுகையில், மதுரையை ஆட்சி செய்த நாயக்கர்கள் வைணவர்களாக இருந்தும் சிவன் கோவில், பெருமாள் கோவில் என அனைத்து திருக்கோவில்களுக்கும் திருப்பணிகள் செய்தார்கள்.


மீனாட்சியம்மன் திருக்கோவிலுக்கு மிகுதியான திருப்பணிகள் செய்துள்ளார்கள். மதுரை நாயக்கர் காசுகளில் காளை, மான், பாலகிருஷ்ணன், விஷ்ணு, லட்சுமி, சங்கு சக்கரம், யானை, ஒட்டகம், ராமர், கருடன், அனுமன், லிங்கம், சிவன், பார்வதி, கணபதி, விஷ்ணுவின் அவதாரங்கள், மயில் கண்ட பேருண்ட பறவை, திரிசூலம், சரஸ்வதி, கஜலட்சுமி, மயில்மேல் முருகன், மீனாட்சி, ஆண்டாள், நடராஜர் போன்ற கடவுளரின் உருவங்கள் காசுகளில் பொறிக்கப்பட்டுள்ளன.

நாயக்க மன்னர்கள் சைவத்தையும் வைணவத்தையும் சமமாக போற்றியுள்ளனர் என்பதை காசுகள் மூலம் அறிய முடிகிறது. மதுரை நாயக்கர் அமர்ந்த காளையும், சூலமும் சின்னமாக இருந்துள்ளன. மதுரை நாயக்கர்கள் வெளியிட்ட எழுத்துப் பொறிப்புள்ள பொறிப்புகள் இல்லாத பல காசுகளில் பல்வேறு நிலைகளில் திருமாலின் அவதார உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அக்காசுகள் செம்பு உலோகத்திலேயே அச்சடிக்கப்பட்டுள்ளன.
தமிழ், தெலுங்கு, நாகரி எழுத்துக்கள் காசுகளில் பொறிக்கப்பட்டுள்ளன. தெலுங்கு எழுத்துக்களை அதிகமாக பயன்படுத்தியுள்ளது கண்டறிந்த காசுகள் மற்றும் நூல்கள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. இதைப்போல வரலாற்றினை அனைவரும் அறிந்து கொள்ள வரலாற்று நூல்களை படிக்க வேண்டும் என்றார்.
நாணயவியல் சேகரிப்பாளர்கள் முகமது சுபேர், ரமேஷ், சந்திரசேகரன், அரிஸ்டோ உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். முன்னதாக செயலர் குணசேகரன் வரவேற்க, பொருளாளர் அப்துல் அஜீஸ் நன்றி கூறினார்.
