துறையூர் டாஸ்மாக் பாரில் பயங்கரம்.. சரக்கு கேட்டு ஊழியரை சரமாரியாக வெட்டிய மர்ம நபர்கள்!
திருச்சி மாவட்டம், துறையூர் பாலக்கரை அருகே உள்ள சினிமா தியேட்டர் எதிரில் டாஸ்மாக் கடை உள்ளது. அதன் அருகிலேயே பார் செயல்பட்டு வருகிறது. பாரில் ஆலத்துடையான்பட்டியைச் சேர்ந்த சக்திவேல் (27) மருவத்தூரைச் சேர்ந்த பெத்துமலை (50) அதே ஊரைச் சேர்ந்த சங்கர் (45) பெருமாள் (55) தேரப்பம்பட்டியைச் சேர்ந்த சிவக்குமார் (30) ஆகியோர் பணியாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர்.

நேற்று இரவு வழக்கம் போல பார் இரவு 10 மணியுடன் மூடப்பட்டு ,பாரை மூடிவிட்டு சுத்தம் செய்து கொண்டிருந்தனர். இரவு 10.30 மணியளவில் காரில் வந்த மர்ம நபர்கள் சிலர் பார் கதவை தட்டி, சரக்கு கேட்டுள்ளனர். அதற்கு உள்ளிருந்து சக்திவேல் என்பவர் பார் மூடப்பட்டு விட்டது. இப்போது சரக்கு இங்கு கிடையாது என கூறியுள்ளார்.

அதற்குள் அத்துமீறி உள்ளே நுழைந்த மர்ம நபர் ஒருவர்தான் மறைத்து எடுத்து வந்திருந்த பட்டாக்கத்தியை எடுத்து பணியாளர் சக்திவேலின் தலைநெற்றி, வலது கை என சரமாரியாக வெட்டியதில் சக்திவேல் உடலெங்கும் ரத்தம் சொட்ட நிற்க, உடன் இருந்த பணியாளர்கள் தடுக்க முற்பட மர்ம நபர்களில் மற்றவர்கள் பாரிலிருந்த சோடா பாட்டில்களை எடுத்து மற்ற பணியாளர்களைத் தாக்கியுள்ளனர்.

இதில் மற்ற பணியாளர்களுக்கும் காயம் ஏற்பட்டது. மேலும் பணியாளர்கள் சத்தம் போடவே, காரில் வந்த மர்ம நபர்கள் உடனடியாக அங்கிருந்து காரில் ஏறி தப்பியோடி விட்டனர். ரத்த வெள்ளத்தில் இருந்த சக்திவேலை உடன் இருந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
பலத்த காயமடைந்த சக்திவேலுக்கு தலை , நெற்றி , வலது கை ஆகியவற்றில் மொத்தம் 24 தையல்கள் போடப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக சக்திவேல் துறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் துறையூர் போலீசார் வழக்கு பதிந்து தப்பியோடிய குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். அரசு டாஸ்மாக் கடையில் சிசிடிவி கண்காணிப்பு கேமரா வைக்கப்படவில்லை. மர்ம நபர்கள் 4 பேர் காரில் வந்ததாக கூறப்படுகிறது. அரசு மதுபான பாரில் நடந்த சம்பவம் துறையூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-ஜோஸ்
