நதிகள் பாதுகாப்புக் கூட்டமைப்பு மாநிலக் கலந்தாய்வுக் கூட்டம் !
நதிகள் பாதுகாப்புக் கூட்டமைப்பின் தமிழ்நாடு- புதுவை மாநில அளவிலானக் கலந்தாய்வுக் கூட்டம் 21.02.2026 உலகத் தண்ணீர் நாளில் திருச்சியில் நடைபெற்றது. சமூக செயல்பாட்டு இயக்கத்தின் மாநில முதன்மை அமைப்பாளர் அ. ரெங்கநாதன் தலைமை வகித்தார். அவர் தமது தலைமையுரையில்..
” இயற்கையின் பேரழிவு காரணமாக கடுமையானக் காலநிலை மாற்றம் ஏற்பட்டு உயிரினங்கள் பேரழிவை நோக்கிச் செல்லும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. வளர்ச்சி என்ற பெயரில் இயற்கையை அழிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. இச்சூழலில் நதிகள் உள்ளிட்ட இயற்கை ஆதாரங்களைப் பாதுகாக்க நாம் குரல் கொடுக்க வேண்டும்.” என்று குறிப்பிட்டார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் திரு அயிலை.சிவசூரியன், தமிழ்நாடு கல்வி உரிமைக் கூட்டமைப்பின் மாநில அமைப்பாளர் பசுமை க. மூர்த்தி, நதிகள் பாதுகாப்புக் கூட்டமைப்பின் மாநில அமைப்பாளர் வழக்கறிஞர் தமிழகன், சோ ஹேஸ் நிறுவன இயக்குநர் எம். ஏ. சேகர், அமைப்புசாராத் தொழிலாளர் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் செல்ல. செல்வகுமார், ஒயிட் ரோஸ் நிறுவன இயக்குநர் பி. சங்கர், ஆத்தூர் பவர் அறக்கட்டளை இயக்குநர் ரு சி. ராமு, தனித்து வாழும் பெண்கள் கூட்டமைப்பின் செயலாளர் மெர்சி, ஜீவா அறக்கட்டளை இயக்குநர் எஸ். ஆர். மகேஸ்வரி, நதிகள் பாதுகாப்புக் கூட்டமைப்பின் மையக் குழு உறுப்பினர் தே.லதா மகேஸ்வரி, ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் திருச்சி மாவட்டத் தலைவர் கே சந்திரசேகர், நதிகள் பாதுகாப்புக் கூட்டமைப்பின் செங்கல்பட்டு மாவட்ட அமைப்பாளர் ஜான் மில்டன், உள்ளிட்டோர் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர்.

கூட்டத்தில் கீழ்க்கண்டத் தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.
1.தமிழ்நாட்டில் சுதந்திரத்திற்கு முன்பே 39000 ஏரி, குளங்கள் இருந்தன. ஆனால் இவற்றில் பெரும்பாலானவை அழிக்கப்பட்டுவிட்டன. எனவே இருக்கின்ற ஏரி, குளங்களைத் தூர்வாரி பாதுகாக்கப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2.தனிநபர், தொழிற்சாலைகள், நெடுஞ்சாலைகள், மற்றும் அரசின் தேவைகள் எதுவானாலும் நீராதாரங்களை அழிப்பதையும் ஆக்கிரமிப்பதையும் தடுக்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும்.
3.காவிரி டெல்டா உள்ளிட்ட நீர்ப்பாசனக் கால்வாய்களை விரைந்து புதுப்பிக்க வேண்டும்.
4.வெள்ள நீரை சேமிக்கும் வகையில் அவசியமான இடங்களில் ஆறுகளில் தடுப்பணைகளை அமைக்க வேண்டும்.
5.திருச்சியிலிருந்து பெரம்பலூர்,புதுக்கோட்டை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களுக்குக் கால்வாய் அமைத்து காவிரி நீரைக் கொண்டு செல்ல வேண்டும்.
6.தமிழ்நாட்டில் மேட்டூர் உள்ளிட்ட அணைகளைத் தூர்வாரி ஆழப்படுத்துவதன் மூலம் மழைக்காலங்களில் கிடைக்கும் அதிகளவிலான நீரை சேமிக்க உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.
கரூர் விவேக் வரவேற்றார்.காஞ்சிபுரம் ஐ டி டி நிறுவன ஒருங்கிணைப்பாளர் சம்பத்குமார் நன்றி கூறினார். கவிஞர் நெல்லை சுப்பையா எழுச்சிப் பாடல்களைப் பாடி அனைவரையும் மகிழ்வித்தார்.