திருச்சியில் முத்தமிழ்ச் சங்கம் – 3ஆம் ஆண்டு விழா !
திருச்சியில் முக்குலத்தோர் மேல்நிலைப் பள்ளியின் மேனாள் தலைமையாசிரியரும், தமிழ்ப் பற்றாளரும், கவிஞருமான செ.சக்திவேல் அவர்களைத் தலைவராகக் கொண்டு திருச்சி முத்தமிழ்ச் சங்கம் நடைபெற்றது வருகின்றது. முகநூல் வழியாகக் கவிஞர்களை, சிறுகதை எழுத்தாளர்களை ஒருங்கிணைத்து இந்தத் தமிழ்ச்சங்கம் செயல்பட்டு வருகின்றது. இதன் 3ஆம் ஆண்டு விழா கடந்த 15.02.2026ஆம் நாள் திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கத்தில் கலை இலக்கியப் பெருவிழாவாகக் காலை முதல் மாலை நடைபெற்றது.
இந்த முத்தமிழ் விழாவிற்குச் சங்கததின் துணைத் தலைவர் முனைவர் கு.கதிரேசன் தலைமை தாங்கினார். சங்கத்தின் தலைவர் கவிஞர் செ.சக்திவேல் வரவேற்புரையாற்றினார். தமிழ்ச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் சி.விசராமன், சிரா. செல்வகுமார் ஆகியோர் முன்னிலை பொறுப்பேற்றிருந்தனர். திருச்சி தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி பணி நிறைவு பெற்ற பேராசிரியர் முனைவர் தி.நெடுஞ்செழியன் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நெறியாள்கை செய்தார்.
காலை 10 சிவராமன் தன்முனைக் கவியரங்கம் கவிஞர் அன்புச்செல்வி சுப்புராஜூ தலைமையில் நடைபெற்றது. இக் கவியரங்கில் 25 கவிஞர்கள் பங்கேற்றுக் கவிதைகளை வழங்கினர். பகல் 11.30 மணியளவில் நெஞ்சு பொறுக்குதில்லையே என்னும் பொருண்மையில் மரபு கவியரங்கம் நடைபெற்றது. இக் கவியரங்கத்திற்குத் தமிழ்ச்செம்மல் இராம.வேல்முருகன் தலைமை தாங்கினார். கவியரங்கில் 25 கவிஞர்கள் பங்கேற்றுக் கவிதை வாசித்தனர்.
பிற்பகல் 2.00 மணியளவில் “இன்றைய காலத்தில் இல்லறங்கள் பெரிதும் சிறப்படைவது – நிச்சயித்த திருமணத்திலா? காதல் திருமணத்திலா? பட்டிமன்றம் நடைபெற்றது. இப் பட்டிமன்றத்திற்கு மரபு மாமணி சரஸ்வதி பாஸ்கரன் நடுவராக இருந்தார். இப்பட்டிமன்றத்தில் முத்தமிழ்ச் சங்கம் சார்ந்த கவிஞர்கள், படைப்பாளிகள் பலரும் பங்கேற்றுச் சிறப்பித்தனர். இன்றைய காலத்தில் இல்லறங்கள் பெரிதும் சிறப்படைவது நிச்சயத் திருமணத்தில்தான் என்று நடுவர் தீர்ப்பு வழங்கினார்..
பிற்பகல் 3.30 மணியளவில் வாழ்த்துரை மற்றும் விருதுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந் நிகழ்வுக்குத் திருச்சி முத்தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கவிஞர் செ.சக்திவேல் தலைமை தாங்கினார். கவிஞர் சிரா.செல்வகுமார் வரவேற்புரையாற்றினார். தமிழ்ச் சங்கத்தின் இணை ஒருங்கிணைப்பாளர் முனைவர் அ.இரம்யா ஆண்டறிக்கை வாசித்தார். தொடர்ந்து நடந்த வாழ்த்தரங்கில் திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கத்தின் அமைச்சர் தமிழ்ப்பணிச் செம்மல் பெ.உதயகுமார், பேராசிரியர் முனைவர் சு. செயலாபதி, கவிஞர் கவிநிலா மோகன் – ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

முத்தமிழ்ச் சங்கத்தின் 3ஆம் ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு விழா பேருரையை மூளை நரம்பியல் நிபுணர் டாக்டர் எம்.ஏ.அலீம் நிகழ்த்தினார். தமிழின் தொன்மை காலத்தின் பெருமைகளையும், நிகழ்காலத்தில் அந்தப் பெருமைகள் மேலும் பெருகிக்கொண்டிருக்கின்றது என்பதைப் பல்வேறு ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் தெரிவித்தார்.
தொடர்ந்து, கவிதைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களும், சிறுகதை எழுதி வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. பல்வேறு ஆளுமைகளுக்கு, பாரதி, பாரதிதாசன், கவிஞர் வாலி, கவிஞர் வைரமுத்து, எழுத்தாளர் ஜெயகாந்தன் பெயர்களில் விருதுகள் வழங்கப்பட்டன. உரிமைகோரப்படாத அநாதை பிணங்களை மரியாதையோடு அடக்கம் செய்யும் சமூகப் பணியைத் தொடர்ந்து செய்து வரும் யோக விஜயக்குமார் அவர்களுக்கு “சேவைச் செம்மல் விருது வழங்கப்பட்டது.
இவ் விழாவில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சார்ந்த கவிஞர் கோ.கலியமூர்த்தி, தமுஎசக வழக்கறிஞர் வி.ரெங்கராஜன், சிரா இலக்கியக் கழகத்தின் தலைவர் திருமதி கேத்தரின் ஆரோக்கியசாமி, கோவிந்தம்மாள் தமிழ்மன்றத்தின் செயலாளர் முனைவர் இரா.ஜெயலெட்சுமி கவிஞர் மு.சாகீர் உசேன், திருமதி தனலெட்சுமி, ஆசிரியர் திருமதி எஸ்.செசிலி, பன்முகக் கலைஞர் இலால்குடி த.முருகானந்தம், கவிஞர் பட்டாளி, அகிலம் வெல்வோம் அறக்கட்டளை சார்ந்த சுமித்ராதேவி மாதவன், திருச்சி பாஸ்ட் நியூஸ் லோ.பாபு, கல்லூரி உதவிப்பேராசிரியர் முனைவர் கா.சுமித்ரா ஆகியோர் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர். முத்தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவர் கவிஞர் தில்லை சண்முகம் நன்றி கூறினார்.
முத்தமிழ்ச்சங்கத்தின் மூன்றாம் ஆண்டு விழா நிகழ்வுகள் அனைத்தும் தலைவர் செ.சக்திவேல் அவர்களின் சொந்த நிதியில் நடத்தப்பட்டது என்பது பெருமைக்குரிய செய்தியாகும். இதுபோன்ற தமிழுக்குப் பெருமை சேர்க்கும் நிகழ்வுகளால் தமிழ் நிலைத்து நீடித்துக் காலங்களைத் தாண்டி உயர்ந்து நிற்கும் என்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது.
கல்லூரி மாணவர்களுக்குக் கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பேச்சுப்போட்டி, கவிதைப் போட்டி நடத்தப்பட்டது. இருப்பிரிவுகளிலும் வெற்றிப் பெற்றவர்களுக்கு முதல் பரிசு 3,000/- இரண்டாம் பரிசு ரூ.2000, மூன்றாம் பரிசு ரூ.1000/- ஆறுதல் பரிசாக கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் நூல்கள் வழங்கப்பட்டன.
முத்தமிழ்ச் சங்க விழாவிற்கு திருவனந்தபுரம், பெங்களூரூ, ஹைதராபாத் போன்ற வெளி மாநிலங்களிலிருந்து கவிஞர்கள் மற்றும் சிறுகதை படைப்பாளிகள் கலந்துகொண்டனர்.
— ஆதவன்