காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் தீவிரம் !
தமிழக தேர்தல் தேதி நாளை அல்லது அடுத்த சில நாள்களில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தேர்தல் களம் விறுவிறுப்படைந்துள்ளது. தமிழகத்தில் ஆளும் திமுகவுடன் தொகுதிப் பங்கீட்டை காங்கிரஸ் கட்சி இறுதி செய்துள்ளது.
எந்தெந்த தொகுதிகள் என்பது விரைவில் கட்சித் தலைவர்கள் கூடி முடிவெடுப்பார்கள் என தலைமை அறிவித்துள்ளது. இதற்கிடையில் தமிழக முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட 5000 -க்கும் மேற்பட்டோர் விருப்பமனு அளித்துள்ளனர். இதில் விருப்பமனு அளித்தவர்களிடம் மாவட்ட வாரியாக அந்தந்த மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் மூலம் மாவட்ட காங்கிரஸ் அலுவலகங்களில் நேற்று காலை முதல் இரவு 7 மணி வரை நேர்காணல் நடைபெற்றது. குறிப்பாக திருச்சி அருணாச்சலம் மன்றத்தில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் எல்.ரெக்ஸ் தலைமையில் நேர்காணல் நடைபெற்றது.
இதில் கிழக்கு தொகுதிக்கு திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் எல்.ரெக்ஸ், அமைப்புசாரா தொழிலாளர் காங்கிரஸ் மாநிலத் துணைத் தலைவர் எல்.ஐ.சி.ஜெயராமன் உள்பட 30 பேரிடம் நேர்காணல் நடத்தப்பட்டது.மேற்கு தொகுதிக்கு 7 பேரிடம் நேர்காணல் நடத்தப்பட்டது. நேர்காணலின்போது பல தரப்பட்ட கேள்விகள் முன்வைக்கப்பட்டது. அனைத்து கேள்விகளுக்கும் விருப்பமனு தாக்கல் செய்தவர்கள் பதிலளித்து பேசினர். இதில் ஒவ்வொரு தொகுதிக்கும் 5 பேர் கொண்ட பட்டியலை மாவட்ட தலைவர்கள் தேர்வு செய்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமைக்கு அனுப்பி வைக்கின்றனர். தமிழ்நாடு முழுவதும் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 5 பேர் கொண்ட பட்டியலை தயார் செய்துள்ளனர். இந்தப் பட்டியலின் அடிப்படையில் காங்கிரசுக்கு திமுக கூட்டணியில் ஒதுக்கப்படும் தொகுதி பங்கீட்டு இடங்களின் அடிப்படையில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இதை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி ஒப்புதலுடன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை முடிவு செய்யும் என திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர், திருச்சி மாநகராட்சி கவுன்சிலர் எல்.ரெக்ஸ் தெரிவித்தார். இதேபோல் திருச்சி வடக்கு மாவட்டத்தில் மாவட்ட தலைவர் தொட்டியம் சரவணன் தலைமையிலும்,திருச்சி தெற்கு மாவட்டத்தில் மாவட்ட தலைவர் கே.ஆர்.ஆர் ராஜலிங்கம் தலைமையிலும் நேர்காணல் நடைபெற்றது. இதில் மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளில் விருப்பமனு தாக்கல் செய்தவர்கள் கலந்து கொண்டனர். இதே போல் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தொகுதிகள் வாரியாக விருப்பமனு தாக்கல் செய்யப்பட்டவர்களிடம் நேர்காணல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இதனால் தேர்தல் களம் விறுவிறுப்படைந்துள்ளது.