10 வது நாளாக தொடர் போராட்டம் ! நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது!
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நில அளவைத் துறையில் பணிபுரிந்து வரும் அனைத்து நிலையிலான அலுவலர்களின் உயிர் மற்றும் உடைமைகளை பாதுகாக்கவும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கவும் சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை உடனே இயற்ற வேண்டும். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மற்றும் நில அளவைத் துறையில் பணிபுரிந்து வரும் அலுவலர்களின் பணித்தன்மை மற்றும் பணிபளுவை கருத்தில் கொண்டு அனைத்து நிலை அலுவலருக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் உடன் வழங்க வேண்டும்.
கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் உடனே வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்யப்படும் கிராம நிர்வாக அலுவலரின் கல்வி தகுதியை பட்டப் படிப்பாக நிர்ணயம் செய்ய வேண்டும். தற்போதைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி, விரைவான போக்குவரத்து வசதிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலருக்கு உரிய குடியிருப்பு வசதிகள் இல்லாத நிலையில் பேரிடர் காலங்களை தவிர மற்ற காலங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் கிராமங்களிலேயே தங்கி பணிபுரிய வேண்டும் என்பதை தளர்வு செய்து வட்ட எல்லைக்குள் தங்கி பணிபுரியும் வகையில் தமிழ்நாடு அமைச்சுப் பணி விதிகளில் உரிய திருத்தங்கள் செய்ய வேண்டும் என்பன உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 10 -வது நாளாக காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் இன்று நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு
வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரேம்குமார் தலைமை தாங்கினார். இந்தப் போராட்டத்தில் தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பொன். மாடசாமி, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் வெற்றிச்செல்வன், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் அய்யனார், நில அளவையர்கள் சங்கம் மகேஷ், கிராம உதவியாளர்கள் சங்கம் நாகராஜ் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
தொடர்ந்து பத்தாவது நாளாக இன்று வருவாய்த்துறை ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் தொடர் போராட்டத்தால் வருவாய் துறை பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.