திருச்சியில் தயார்நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் !

0

2026 தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கு பயன்படுத்தவுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை கணினி முறையில் தேர்வு செய்யும் நிகழ்வை தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்களின் வைப்பறையில் தொகுதி வாரியாக பிரிக்கும் பணியை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான வே.சரவணன் ஐ.ஏ.எஸ். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மார்ச்-23 அன்று பார்வையிட்டார்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தேவையான அளவில் இருப்பு உள்ளது. தற்போது வேட்பாளர்களின் பெயர், சின்னம் இடம் பெறும் வாக்குப்பதிவு கருவி 7,906-ம், கட்டுப்பாட்டு கருவி 3,541-ம், ஒப்புகை சீட்டு வழங்கும் வி.வி.பேட் கருவி 3,810-ம் – இருப்பு வைக்கப்பட்டு உள்ளன. இந்த எந்திரங்களின் முதல் கட்ட சோதனை நிறைவடைந்து பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

தேர்தல் பணிஇந்நிலையில், மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மற்றும் வாக்குப்பதிவு சரிபார்க்கும் எந்திரம் ஆகியவற்றின் முதல்கட்ட ஒதுக்கீடு குறித்த விரிவான  வழிமுறைகள் குறித்து நடைமுறை குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் இது, இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் (https://www.eci.gov.in/evm-vvpat) இடம் பெற்றுள்ளது.

முதற்கட்ட ஒதுக்கீடு

அந்த வழிமுறைகளின் படி திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வாக்காளர்கள், தாங்கள் செலுத்திய வாக்கினை சரி பார்க்கும் கருவிகள் தேர்தல் ஆணையத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு மேலாண்மை அமைப்பு மூலம் தொகுதி வாரியாக முதலாவது சம வாய்ப்புக்கு உட்படுத்தப்பட்டு ஒதுக்கீடு செய்யும் பணி இன்று  நடைபெற்றது.

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட தேர்தல் அலுவலர் சரவணன் தலைமையில் தேசிய மற்றும் மாநில அங்கீகாரம் பெற்ற கட்சியினர் முன்னிலையில் இப்பணிகள் நடைபெற்றது. பின்னர் சட்டமன்ற தொகுதி வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்ட  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவு சரிபார்க்கும் கருவிகள் ஆகியவற்றின் விவர பட்டியல்கள் தேசிய, மாநில அங்கீகாரம் பெற்ற கட்சியினருக்கு வழங்கப்பட்டது.

தேர்தல் பணிதொகுதிகளுக்கு அனுப்பி வைப்பு பிறகு மதியம் மாவட்ட காப்பு அறை அரசியல் கட்சியினர் முன்னிலையில் திறக்கப்பட்டு, முதற்கட்ட ஒதுக்கீடு செய்யப்பட்ட பட்டியல்படி மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவை சரிபார்க்கும் கருவிகள் சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வசம் ஒப்படைக் கப்பட்டது. பின்னர் அவை மாவட்ட காப்பறையில் இருந்து பாதுகாப்பாக வாகனங்களில் எடுத்துச்செல்லப்பட்டு, சம்பந்தப்பட்ட தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள காப்பு அறையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் வைக்கப்பட்டு, ‘சீல்’ வைக்கப்படும்.

மேலும், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டவுடன் சட்டமன்ற தொகுதி வாரியாக, பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் பட்டியல் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வழங்கப்படும். அதன்பின்னர், அவை மண்டல வாரியாகவும். வாக்குச்சாவடி வாரியாகவும் பிரித்து அனுப்பப்படும் என்று மாவட்டதேர்தல் பிரிவினர் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.